ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜீயரிடம் ஆசி பெற்றனர். உலக நன்மைக்காகவும் புழு, பூச்சிகள் முதல் அனைத்து ஜீவராசிகளும் துன்பப்படாமல் நலமுடன் இருக்க சன்னியாசிகள் மேற்கொள்ளும் விரதம் சாதுர்மாஸ்ய விரதம் ஆகும். சன்னியாசிகள் ஏதேனும் ஒரு புண்ணிய ஸ்தலத்தில் தங்கி விரதம் மேற்கொள்வர். இதன்படி, ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஜீயர் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் கடந்த ஜூலை 15ம் தேதி சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கினார். இரண்டு அமாவாசை, இரண்டு பவுர்ணமி முடித்து நேற்று ஜீயர் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். ஜீயர் சுவாமிகள் முன்னதாக நித்தியாராதன மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடத்திய பின்னர் பிடித்து வைத்த மண் சட்டியை நீரில் கரைத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். ஜீயர் விரதத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு ஜீயர் மடத்தில் வேத பாராயணங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து ஜீயர் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று ஸ்ரீலெட்சுமிநரசிம்மரை தரிசித்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் சார்பில் மாலை பரிவட்டம் போன்ற மரியாதை செய்யப்பட்டது. இதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஜீயர் சுவாமிகள் அமர வைக்கப்பட்டார். ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளில் பட்டின பிரவேசமாக அழைத்துச் செல்லப்பட்டார். சித்திரை, உத்திர வீதிகள் வழியாக ஜீயர் சுவாமிகள் வடக்குவாசலில் உள்ள மடத்தினை அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டது.