பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
01:07
ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள, சுயம்பு கோலாட்சி அம்மன் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, சுயம்பு கோலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கடந்த சில மாதங்களாக, கோவிலில் திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் படி, கடந்த, 7ம் தேதி, கணபதி பூஜையுடன் விழா ஆரம்பித்தது. தொடர்ந்து, லட்சுமி ஹோமம், நான்கு யாகசாலை பூஜைகள் மற்றும் பல வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று காலை, 7:30 மணிக்கு, பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11:00 மணிக்கு, மூலவர் கோலாட்சி அம்மன் மற்றும் புற்று கோவில் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பங்கேற்றனர். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். இன்று முதல், 45 நாட்களுக்கு, மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.