பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
01:07
வேலுார்: -புல்லுார் கனகநாச்சியம்மன் கோவிலை, ஆந்திர மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடி அடுத்த புல்லுாரில், ஆந்திர மாநில அரசு, தடுப்பணை உயரத்தை அதிகரித்து கட்டியுள்ளது. மேலும், ஆந்திர மாநில பகுதியில், பாலாற்றில் கட்டியுள்ள, 22 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பராமரிப்பு : புல்லுார் தடுப்பணை அருகில், கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. தமிழக பக்தர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில், இரு மாநிலத்தவரும் வழிபட்டு வந்தனர். தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சீனிவாசன் என்பவரை அர்ச்சகராக நியமித்து, அவருக்கு, ஊதியமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ஆந்திர மாநில அறநிலையத்துறை அதிகாரிகள், அதிரடியாக கோவிலுக்குள் நுழைந்து, அர்ச்சகர் சீனிவாசனை வெளியேற்றினர். கோவிலுக்கு தமிழக எல்லையில் இருந்து வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்து விட்டு, ஆந்திர மாநில எல்லையில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், தமிழக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, ஆந்திர மாநில கோவில் பராமரிப்பு அதிகாரி வெங்கடேசன் கூறியதாவது: கனகநாச்சியம்மன் கோவில் இருக்கும் இடம், ஆந்திர மாநிலத்திற்குள் வருகிறது. இதற்கான ஆதாரங்கள் அரசிடம் உள்ளன. இதனால், தமிழக அர்ச்சகரை வெளியேற்றி விட்டு, ஆந்திர மாநில அர்ச்சகர்கள், இரண்டு பேரை நியமித்துள்ளோம். கோவிலுக்கு ஆந்திர எல்லை யில் இருந்து, மின் இணைப்பை கொடுத்து, புதிய மின் விளக்கு பொருத்தியுள்ளோம். இனி கோவிலுக்கான மின் கட்டணம், கோவில் பராமரிப்பு செலவை நாங்களே ஏற்போம்.
ரூ.20 கோடி : புல்லுார் தடுப்பணை அருகில் சுற்றுலா மாளிகை, படகு இல்லம், மிருகக் காட்சி சாலை, பக்தர்களுக்கு குளியல் அறை அமைக்க, 20 கோடி ரூபாய் நிதியை ஆந்திர அரசு ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கோவிலை ஆந்திர அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதால், கோவிலுக்கும், புல்லுார் தடுப்பணைக்கும், ஆந்திர மாநில அதிரடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.