பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
12:07
மேட்டுப்பாளையம்: வனபரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது. மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆடிக்குண்டம் விழா, நேற்று முன் தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றின் கரையில் உள்ள முத்தமிழ் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை செய்யப்பட்டது. ஆற்றின் கரையில் அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், குங்குமம், திருநீர் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். ஆற்றிலிருந்து நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரனை அம்மன் ஆபரண அணிக்கூடையுடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு வலது கையிலும், சூலாயுதத்திலும், காப்பு கட்டினர். பின்பு, அர்ச்சகர் தனசேகர குருக்கள் பூசாரி பரமேஸ்வரனுக்கு காப்பு கட்டினார். அதைத் தொடர்ந்து இரவு, 9:30 மணிக்கு நெல்லித்துறை ஊர்பொது மக்கள் சார்பில் பூச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஊர்கவுடர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பால்குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் பணியாளர்கள் நெல்லையப்பன், திருநாவுக்கரசு, கந்தசாமி, செந்தில்குமார், உதவி பூசாரிகள், பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். வரும், 22ம் தேதி காலை லட்சார்ச்னையும், 24ல் தேக்கம்பட்ட ஊர் பொது மக்கள் சார்பில் கொடியேற்றமும், 25ல் குண்டம் திறப்பும், 26ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.