பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
01:07
புதுச்சேரி: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி, வாகனங்களை இழுத்தும், பறவைக்காவடி சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். நனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 33ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 14ம் தேதி, கொடி யேற் றம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற் றும் பூஜைகளும், இரவு, சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று செடல் திருவிழாவையொட்டி, காலை 9:00 மணியளவில், முத்து மாரியம்மன் கோவிலிலிருந்து பூங்கரகம் எடுத்து, நாகமுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு செடல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு செடல் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வேண்டுதலின்பேரில் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:30 மணிக்கு அம்மன் அலங்காரத்து டன் தேர்பவனி – செடல் ஊர்வலம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு, கார், ஆட்டோ, வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், பாஸ்கர் எம்.எல்.ஏ., சிறப்பு அதிகாரி பழனிசாமி பங்கேற்றனர். செடல் திருவிழாவையொட்டி, கடலுாரில் இருந்து புதுச்சேரி வந்த வாகனங்களும், புதுச்சேரியில் இருந்து, கடலுார் சென்ற வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.