பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
பழநி: திருப்பதியை போல பழநிகோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.1.62 கோடி செலவில் புதிதாக ஒருங்கிணைந்த முடிக்காணிக்கை கூடம் கட்டும் பணி நடக்கிறது. திருப்பதிகோயிலுக்கு அடுத்தப்படியாக பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் முடிகாணிக்கை (மொட்டையடித்து) செலுத்துகின்றனர். பழநியில் திருஆவினன்குடிகோயில் அருகே சரவணப்பொய்கை, சண்முகநதி, அடிவாரம் கிழக்குகிரிவீதி, வீரதுர்க்கையம்மன்கோயில், தண்டபாணி நிலையம், வின்ச் ஸ்டேஷன் அருகே, பாதவிநாயகர்கோயில், பூங்காரோடு உள்ளிட்ட இடங்களில் முடிகாணிக்கை நிலையங்கள் செயல்படுகிறது. மொட்டையடிக்க கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கின்றனர். இந்நிலையில் கிழக்குகிரிவீதி, வின்ச் ஸ்டேஷன், பாதவிநாயகர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முடிக்காணிக்கை நிலையங்களை ஒன்றாக சேர்த்து ஒரே இடத்தில் வடக்குகிரிவீதி தண்டபாணி நிலையம் அருகே ரூ.1.62 கோடி செலவில் முதல் தளத்துடன் ஒருங்கிணைந்த முடிக்காணிக்கை கூடம் கட்டும்பணி நடக்கிறது. இதன் மூலம் தைப்பூசம், பங்குனி உத்திரம் விழாக்காலங்களில் குவியும் பக்தர்கள் ஒரே இடத்தில் எளிதாக முடிகாணிக்கை செலுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“தற்போது 8 இடங்களில் முடிகாணிக்கைநிலையங்கள் செயல்படுகிறது. அவற்றில் திருஆவினன்குடி, சண்முகநதி முடிகாணிக்கை நிலையங்களை தவிர்த்து, பிறபகுதியில் சிறிய இடத்தில் செயல்படுகிறது. இங்கு விழாக் காலங்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவும், சிரமம் இல்லாமல் நுாற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் முடிகாணிக்கை செலுத்தும் வகையில் ஒருங்கிணைந்த முடிகாணிக்கை கூடம் கட்டும் பணி நடக்கிறது,”என்றார்.