விழுப்புரம்: உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி, விழுப்புரத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. விழுப்புரம் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பக்தி பீடம் அறக்கட்டளை சார்பில், முதலாமாண்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் உபன்யாசம் சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியை யொட்டி, விழுப்புரம் பெருமாள் கோவிலிலிருந்து தணிகாசலம் குழுவினரின் சங்கீர்த்தன பஜனையுடன் ஊர்வலமாக சண்முகா திருமண மகாலிற்கு சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் ரகுவீர் பட்டாச்சாரியார் ஸ்வாமிகள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்(ஓய்வு) குணசேகரன், குறள் நெறிமன்ற அறக்கட்டளை தலைவர் கண்ணன், நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை தலைவர் கண்ணன் கிருஷ்ணா முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் கலியபெருமாள் வரவேற்றார். தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. இதில், ஸ்ரீரங்கம் நிவாஸாச்சாரியார் ஸ்வாமிகள், வெங்கடேஷ் சுவாமிகள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கவுரவ தலைவர் ரகுமான் நன்றி கூறினார்.