பதிவு செய்த நாள்
01
ஆக
2016
12:08
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தள்ளிப்போய் கொண்டிருந்த, காணிக்கை முடி ஏலம் முடிவுக்கு வந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலம். இக்கோவிலுக்கு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் மொட்டை அடிப்பதன் மூலம் கிடைக்கும் தலை முடியை சேகரித்து, ஆண்டிற்கு ஒரு முறை கோவில் நிர்வாகத்தால் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக ஏலம் கேட்க யாரும் முன்வராததால், விடப்படவில்லை. சேகரிக்கப்பட்ட முடி, பாதுகாப்பில்லாத முறையில் வைக்கப்பட்டிருந்தது. அதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள முடி காணாமல் போனதாக புகார் எழுந்தது. அதையடுத்து, முடி வைக்கப்பட்டுள்ள இடத்தில், திருட்டு நடக்காமல் கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, முடி ஏலம் விடப்பட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர், 67 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.