பதிவு செய்த நாள்
05
ஆக
2016
04:08
சின்னாளபட்டி: ஆடிப்பூரத்தை முன்னிட்டு திரு வி.க.,நகர் சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர்வரிசை ஊர்வலம், 7 வகை சாத படையலுடன் அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. சின்னாளபட்டி 4வது வார்டு திரு.வி.க.நகரில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி கலய ஊர்வலமும், ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் விசேஷமாக நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான ஆடிப்பூர திருவிழா காலை, சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கியது.
கோயிலில் இருந்து குங்குமம், பச்சரிசி, மஞ்சள்கிழங்கு, மஞ்சள் வண்ண புடவை, வளையல், வாழை, மாம்பழம், சப்போட்டோ, கொய்யா, பேரீட்சை உள்ளிட்ட பலவகை பழங்கள், கற்கண்டு, கருப்பட்டி, எண்ணெய் பதார்த்தங்கள் போன்ற சீர்வரிசைகளுடன், பாரதிநகர் விநாயகர் கோயிலுக்கு சென்றனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயில் முன்பு, கர்ப்பிணி, குழந்தை, திருமண வரம் வேண்டும் பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அம்மனுக்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தக்காளி, தயிர், எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் போன்ற 7 வகை சாதங்கள் படையலிடப்பட்டது. விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, அம்மனுக்கு வளையல் பூட்டுதல் நடந்தது. கர்ப்பிணி பெண்கள் முகத்தில் சந்தனம் பூசி, வளையல் அணிவித்து குருக்கள் இளையராஜா வளைகாப்பை துவக்கி வைத்தார். கோயில் முன்பு அமர்ந்திருந்த பெண்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. வளைகாப்பு இட்ட பெண்களுக்கு, 7 வகை சாதங்கள் பரிமாறப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, வளையல், தாலிக்கயிறு, மஞ்சள்கிழங்கு, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.