அடிப்படை வசதிகள் இல்லாத சாஸ்தா கோயில்: திருவிழா நாட்களில் மக்கள் அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2011 11:09
செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் அடிப்படை வசதியின்றி அமைந்துள்ள சாஸ்தா கோயிலுக்கு நிதி கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். செய்துங்கநல்லூரில் ரயில்வே ஸ்டேசனுக்கு தென்புறம் சுமார் 1 கி.மீ. தூரத்தில் ஒரு ஏக்கர் 42 செண்டு பரப்பளவில் அமைந்துள்ளது சுந்தர பாண்டிய சாஸ்தா கோயில். சரித்திர புகழ் பெற்ற இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. குறிப்பாக பங்குனி உத்திரம் அன்று இங்கு லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இக்கோயில் நடை திறந்திருக்கிறது. குலதெய்வம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோயில் காவல் தெய்வமாக இருந்து மக்களை காப்பாற்றி வருகிறது என்பது மக்களின் ஐதீகம். இத்தகையை வழிபாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்தே தொன்று தொட்டு வருகிறது. பங்குனி உத்திரத்தன்று பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து தங்கள் கூடாரங்களை அமைத்து இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருந்து சுவாமியை வணங்கி செல்வார்கள். கட்ட வண்டியில் வந்து தங்கியிருந்த இம் மக்கள் இந்த நவீன காலத்தில் அன்று மட்டும் கார், பைக் வேன் போன்ற வாகனங்களில் வந்து சுவாமியை தரிசித்து சென்று விடுகின்றனர். இத்தகையை சிறப்பு அம்சம் கொண்ட இந்த சாஸ்தா கோயில் தென்மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கோயில் நிர்வாகம் கூறுகின்றது. வள்ளியூர் அருகில் உள்ள சித்தூரில் அமைந்துள்ள சாஸ்தா முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் கூறுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலுக்கு சுமார் 14 லட்சம் வருமானம் வந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு தினமும் சராசரியாக 100 பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு இங்கு வந்து இந்த சாஸ்தாவை வழிபட்டு சென்று தான் ஆரம்பிப்பது வழக்கமாம். திருமணத்திற்காக ஒரு பெண் தயாராகும் போது இங்கு வந்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து அதன்பின் தான் திருமண காரியத்தை துவங்குகின்றனர். அதன்பின் திருமணம் நிச்சயித்த போதும், திருமணத்திற்கு பின்னும் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். குழந்தை பிறந்ததும் காது குத்தி, மொட்டை போடும் நிகழ்ச்சிகளும் இங்கு அடிக்கடி நடக்கிறது. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற சமயங்களிலும் பக்தர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்கின்றனர். புதிதாக வாங்கிய வாகனங்களையும் இங்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து செல்கின்றனர். இத்தகையை சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நெல்லை திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இக்கோயிலுக்கு செல்லும் ரோடு பிரியும் இடத்தில் அழகான ஆர்ச் ஒன்று அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் ஆசை. கோயிலுக்கு வரும் புதிய பக்தர்கள் வழி தெரியாமல் பஜாருக்கு சென்று அதன்பின் இங்கு வருகின்றனர். இக்கோயிலுக்கு அருகே உள்ள கிணறு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சில நேரங்களில் ஆடு, மாடுகள் அதனுள் விழுந்து விடும் சூழ்நிலை அமைந்துவிடுகிறது. எனவே அந்த கிணற்றின் கைபிடி சுவற்றை பெரிதாக கட்டி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோயிலில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குடிப்பதற்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை, இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீருக்காக 2 கிமீ தூரம் பஜாருக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே பஞ்., நிர்வாகம் இக்கோயிலுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைததுள்ளனர். இக்கோயிலில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சுவாமிநாத வாத்தியார் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழு பூஜாரிகளாக இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் கூறுகையில் இக்கோயிலில் சுவாமிக்கு தினமும் காலையும், மாலையும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கின்றது. இங்கு அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு நெய்யினால் தீபாராதனை காட்டப்படுகிறது. சுவாமிக்கு நெய் மற்றும் சந்தன அபிஷேகங்கள் நடக்கிறது. இங்கு சனிக்கிழமைகளில் உச்சி கால பூஜையாக மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது. அன்று மட்டும் 3வேளை சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுவாமிக்கு 11 மாதாந்திரம் அல்லது அதற்கு கூடுதலாக மாதாந்திரம் வந்து காணிக்கை செலுத்துவேன் என்பது போன்ற நேர்ச்சைகளை செய்து கொண்ட பக்தர்கள் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை உச்சிகால பூஜைக்கு வருவார்கள். எனவே பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில் தங்குமிடம் அமைக்க வேண்டும். கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகளை கட்ட வேண்டும். தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இக்கோயிலுக்குச் செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும், குழியுமான இந்த ரோ ட்டை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோ ரிக்கை வைத்துள்ளனர். சுமார் 1 கி.மீ. தூரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அதை ஏதாவது ஒரு நிதியின் கீழ் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்துங்கநல்லூர் பஸ் ஸ்டாப்பிலிருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் ஆட்டோவை நாடிச்செல்கின்றனர். ஆட்டோவிற்கான கட்டணத்தை வருவாய் துறையினர், காவல்துறையினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து பேசி ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்து விளம்பரம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.இத்தகையை சிறப்புமிக்க கோயிலின் தேவைகளை பூர்த்தி செய்யப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.