பதிவு செய்த நாள்
09
ஆக
2016
11:08
கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியை சேர்ந்தவர் ராமர், 40. இவர் மீன்பிடிப்பதற்காக மங்களூரு கடற்கரைக்கு சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மங்களூரு கடற்கரையில் மீன்பிடிக்கும்போது வலையில் குவளை போன்ற பொருள் சிக்கியது. அதை உடைத்தபோது உள்ளே செப்பு காசுகள் இருந்துள்ளது. இதன் மகத்துவம் தெரியாத ராமர், விளையாட்டுப் பொருளாக எண்ணி, தனது மகள் மோனிகாவிடம் கொடுத்துள்ளார். வரலாறு குறித்த விஷயங்களை விளக்குவதற்காக ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்ற தொல்லியல் ஆர்வலர் விஜயராமு, ஆய்விற்காக அந்த காசுகளை மாணவியிடமிருந்து பெற்றுள்ளார்.
இதுகுறித்து விஜயராமு கூறியதாவது: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் காலம் கி.பி., 980 முதல் 1014 வரை ஆகும். சேரர், பாண்டியர், ஈழம் போன்ற நாடுகளை வென்று, தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். கர்நாடகத்தையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவர். இவரது ஆட்சியில் வெளியிடப்பட்ட இந்த செப்பு காசுகள், என்னிடம் 6 வகையாக உள்ளது. இதில் ராஜ ராஜன் என்ற எழுத்துடன் (வடமொழி வாசகம்) முன்புறமும், நின்ற நிலையில் மன்னரும், பின்புறம் அமர்ந்த நிலையில் தேவியரும் உள்ளனர். மங்களூரு கடலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இக்காசுகள் இப்போது கிடைத்திருப்பது கர்நாடகம் போன்ற பகுதிகளை அவரது ஆட்சியின் கீழ் இருந்தது என்ற வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளரின் கூற்று சரியானவை என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாகும். இக்காசுகள் குறித்து ராமநாதபுரம் அரசு அருங்காட்சியத்தில் வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து தொல்லியல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும், என்றார்.