பதிவு செய்த நாள்
10
ஆக
2016
12:08
மேட்டூர்: விஜயவாடாவில், 12 ஆண்டுகளுக்கு பின், புஷ்கரலு உற்வசம் நடப்பதால், தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு, சரக்கு லாரிகள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம், விஜயவாடா, கர்நூல் மாவட்டத்தில், 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரலு உற்சவம் நடக்கும். இதில், ஆந்திரா மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்று நதிகளில் புனித நீராடுவர். இதனால், தமிழகத்தில் இருந்து, வட மாநிலங்களுக்கு சரக்கு லாரிகள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் சுகுமார் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா, ராஜமுந்திரி தேசிய நெடுஞ்சாலை வழியாக மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு தினமும், 5,000 லாரிகள் சரக்குகள் ஏற்றி செல்கிறது. சிம்மராசியில் இருந்து, கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை ஆந்திராவில் புஷ்கரலு உற்சவம் என, கொண்டாடுகின்றனர். புஷ்கரலு உற்சவம் விஜயவாடா மாவட்டம், துர்க்கை கோவில், புஷ்கரா கோவில், பத்மாவதி கோவில், இடநகரம் கோவில்கள், சிவ சேத்ரம் ஆகிய கோவில்களில் விமர்சையாக நடக்கும். ஆக.12 முதல், 23ம் தேதி வரை, 12 நாட்கள் நடக்கும் உற்சவத்தில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று, கர்நூல் மாவட்டம், பாதாள கங்கை, சங்கமேஸ்வரர் ஆற்றில் புனித நீராடுவர்.
ஆக.12ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை தமிழகத்தில் இருந்து விஜயவாடா வழியாக மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு லாரிகள் நாயுடுபேட்டையில் நிறுத்தி வைக்கப்படும். அங்கிருந்து, 4 மணிக்கு நேரத்துக்கு ஒரு முறை, 50 முதல், 100 லாரிகள் மட்டும் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படும். சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு சரக்கு லாரிகள் செல்ல, 8 மணி நேரமாகும். நாயுடுபேட்டையில் லாரிகளை நிறுத்தி அனுப்புவதால், விஜயவாடாவுக்கு செல்ல குறைந்த பட்சம், 2 முதல் 4 நாட்களாகும். எனவே, தமிழகத்தில் இருந்து மிக அத்யாவசியமான சரக்குகளை மட்டுமே உரிமையாளர்கள் தங்கள் லாரியில் ஏற்றி அனுப்புவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.