ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆன்மிக ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2016 11:08
நெய்வேலி: நெய்வேலியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் என்.எல்.சி., வளம் பெறவும், உலக அமைதிக்காகவும் கஞ்சி வார்த்தல் மற்றும் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. நெய்வேலி வட்டம் 12ல் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக அமைதிக்காகவும், என்.எல்.சி., நிறுவனம் வளம் பெற வேண்டி, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நெய்வேலி வட்டம் 5ல் உள்ள கதிர்காம வேலவர் கோவிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சிக் கலயங்களை சுமந்து ஊர்வலமாக புற ப்பட்டனர். என்.எல்.சி., நகர நிர்வாக பொது மேலாளர் கார்த்திகேயன் கொடியசைத்து ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ‘ஓம் சக்தி; பராசக்தி’ என பக்தி கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.