பதிவு செய்த நாள்
13
ஆக
2016
11:08
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழாவில், "ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் ஆடி கடைசி
வெள்ளிக்கிழமை விழா கடந்த ஆகஸ்ட் 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்கார வாகனம் பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரங்கண்பானை, மாவிலக்கு, பொங்கல், முடிகாணிக்கை என நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் ரிஷபவாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி (ஆக.,12) மதியம் 3.35 மணிக்கு துவங்கியது. சன்னதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், பல்வேறு மேளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து, நத்தத்துபட்டி, கே.மேட்டுப்பட்டி கிராம மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட திருக்கண்ணில் எழுந்தருளினார்.
அர்ச்சுனா நதி இதன் பின் அர்ச்சுனா நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டு வணங்கினர். இதன் பின் அம்மன் இரு கங்கைகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழா மண்டபத்தில் சர்வ அலங்காரத்துடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளினார். வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனர். சாத்துார், கோவில்பட்டி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசியில் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டி.ஐ.ஜி.,ஆனந்தகுமார் சோமானி, எஸ்.பி.,ராஜராஜன் தலைமையில் 700க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.