உத்திரமேரூர்: அழிசூரில், திரவுபதிஅம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், 1,000 ஆண்டு கள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து தினசரி கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு திரவுபதி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நேற்று பிரார்த்தனை மேற்கொண்டு விரதமிருந்த, 501 பக்தர்கள் அழிசூர் குளக்கரையிலிருந்து காப்பு கட்டி, பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின் பக்தர்கள் தங்கள் கரங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.