பதிவு செய்த நாள்
18
ஆக
2016
11:08
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ள கிராமம் பாபுராயன்பேட்டையில், 16ம் நூற்றண்டைச் சேர்ந்த கோவில், பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடப்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராமத்தில், பழமை வாய்ந்த விஜய வரதராஜர் கோவில் எனும் வைணவத்திரு த்தலம் உள்ளது. 20 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள இக்கோவில் வளாகம், தற்போது முற்றிலும் சிதிலமடைந்து, காணப்படுகிறது. இக்கோவிலு க்குச் சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளதாகக்கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்திற்கு இணையானது: ஸ்ரீ விஜய வரதராஜபெருமாள் நின்ற திருக்கோலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் இங்கு, விஜயவல்லித்தாயாரும் எழுந்தருளியுள்ளார். இந்த வளாகத்திலேயே, ராமர் சீதை, வேணுகோபாலசுவாமி, ராதா ருக்மணி, ஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளும் உள்ளன. ஆழ்வார்களுக்கும், கருடனுக்கும் சன்னிதி உள்ளது. மேலும் காஞ்சியில் உள்ளது போல் பொன்பல்லி, வெள்ளி பல்லி மண்டபங்களும் காணப் படுகின்றன. உள்பிரகாரத்தில் விஜய புஷ்கரணி தீர்த்தம், வெளிப் பிரகாரத்தில் கமல தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் உள்ளன. ஏறத்தாழ ஸ்ரீரங்கம் ÷ காவிலுக்கு இணையான திருத்தலமாக இது விளங்கி வந்ததாகவும் தெரிகிறது. காஞ்சி வரதராஜபெருமாள் ஆண்டுக்கொரு முறை இங்கே எழுந்தரு ள்வது வழக்கம் என்றும் ஆன்மிகப்பெரியவர்கள் கூறுகின்றனர். ஐந்து கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் கொண்ட பிரம்மாண்ட கோவிலாக இது உள்ளது.
அதிகாரிகள் செய்வரா?: இக்கோவிலின் புராணப்பெயர் தட்சிணகாஞ்சி என்பதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத்திருக்கோவிலை புனரமைத்து, இதன் பெருமையைக் காக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆன்மிகப்பெரியோரின் வேண்டுகோள்.