ஆதிசேஷனால் விஷ்ணுவின் பாரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பெருமாளிடம், சுவாமி! ஏன் இப்படி பாரமாகி விட்டீர்கள்? என்று கேட்டார். தன் இதயத்தில் சிவனின் நடனத்தைக் கண்டு பரவசப்பட்டதே அதற்கு காரணம் என்றார் விஷ்ணு. ஆதிசேஷனுக்கும் அந் நடனத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அப்போது கோணிகா என்ற தவமங்கை நீராடிவிட்டு சூரியனை நோக்கி வழிபட்டுக் கொண்டிருந்தாள். கைகளில் நீரை முகந்து சூரியனுக்கு அர்க்கியமாகக் கொடுத்துவிட்டு, தனக்கு தெய்வாம்சம் மிக்க புத்திரன் பிறக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். வைகுண்டத்தில் இருந்து இக் காட்சியைக் கண்ட ஆதிசேஷன், கோணிகாவின் அஞ்சலி ஹஸ்தத்தில்(குவித்த கைகளில்) பொத்தென விழுந்துவிட்டார். பத் என விழுதல் என்பது தான் காலப்போக்கில் பொத்தென விழுதல்என்றாயிற்று. பத் என்றால் விழுவது என்று பொருள். அவ்வாறு விழுந்த பாம்புக் குழந்தைக்கு பதஞ்சலி என்று பெயரிட்டு கோணிகா வளர்த்தாள். இவர் சிதம்பரம் சென்று சிவ தியானத்தில் ஆழ்ந்தார். சிவ பெருமானை நடனக்கோலத்தில் காணும் பாக்கியம் பெற்றார்.