பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
சேலம்: சேலம், கருப்பூர் இஸ்கான் கோவில் சார்பில் நடந்த, கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்), 50ம் ஆண்டு என்பதால் நேற்று, சேலம் ஜவஹர் மில்லில் பிரமாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடினர். நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு மங்கல ஆரத்தியுடன் துவங்கிய விழா, இரவு 12 மணிக்கு மகா ஆரத்தியுடன் முடிந்தது. காலை,8 மணிக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தனி அரங்கில், கற்பகவிருட்ச அலங்காரத்துடன், கிருஷ்ணர், பலராமர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாள் முழுவதும் ஆராதனை, கீர்த்தனை, பிரகலாதன் நாடகம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தது. பல குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடத்தில் பங்கேற்று பக்தர்களை பரவசப்படுத்தினர்.