கூடலுார்: முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயருவதற்காக மழை வேண்டி தமிழக விவசாயிகள், தேக்கடியில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினர். முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. முதல் போக நெல் சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் முதல்வாரத்தில் திறக்கப்பட வேண்டிய நீர், நீர்மட்டம் குறைவால் ஜூலை 14 ல் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.20 அடியாக இருந்தது. அதன்பின், மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடியை துவக்கினர். சில இடங்களில் இதுவரை நடவு பணிகளை செய்யாமல் உள்ளனர். தென்மேற்கு பருவ மழையும் போதிய அளவு பெய்யாததால் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து நேற்று காலை நில வரப்படி 116.70 அடியாக (மொத்த உயரம் 152) இருந்தது. இந்த நிலை நீடித்தால் தற்போது முதல் போக நெல் சாகுபடியைத் துவக்கிய நெற்பயிர்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இதற்காக, சின்னமனுார் மற்றும் கம்பம் பகுதி விவசாயிகள் பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை வேண்டி, தேக்கடி தமிழக பொதுப்பணித்துறை ஆய்வாளர் மாளிகையில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் பகுதியில் பூஜை நடத்தினர். சின்னமனுார் விவசாய சங்க தலைவர் ராமசுப்ரமணியம், கம்பம் விவசாய சங்க தலைவர் நாராயணன், தேனி எம்.பி.,பார்த்திபன், முன்னாள் எம்.பி., சையதுகான் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.