அயோத்தி: அயோத்தியில் அபாய நிலையில் உள்ள மசூதி ஒன்றை புனரமைத்து கொள்ள இந்து கோயில் ஒன்று முன்வந்துள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில் ஹனுமன்கர்கி என்ற கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான இடத்தில் மசூதி உள்ளது. இந்த மசூதி கட்டப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டதாலும், புனரமைக்கப்படாததாலும், பழுதடைந்தது. மசூதிக்குள் நுழைய உள்ளூர் நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பான நோட்டீஸ் மசூதியில் ஒட்டப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் முஸ்லிம் மக்கள், மசூதி அமைந்துள்ள ஹனுமன்கர்கி கோயில் டிரஸ்ட் நிர்வாகத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மசூதியை புனரமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கோயில் டிரஸ்ட், மசூதியை புனரமைத்து கொள்ள அனுமதி வழங்கியது. மேலும் இதற்கான செலவை தாங்களே ஏற்கிறோம். கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் முஸ்லிம் சகோதரர்கள் தொழுகை நடத்தலாம் எனவும் கூறியுள்ளது. இந்த மசூதி கடந்த 17ம் நூற்றாண்டில், முகாலாய பேரரசர் அவுரசிங்கசீப் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மசூதியை சுற்றியுள்ள இடம், ஹனுமர்கர்கி கோயிலுக்கு சொந்தமானது. இதன் பின்னர் நவாப் ஷூஜாவுதுல்லா, அந்த இடத்தை கோயிலுக்கு தானமாக வழங்கினார். மசூதியில் தொலுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடம் வழங்கப்பட்டது.