பதிவு செய்த நாள்
02
செப்
2016
05:09
காணாபத்யம் -கணபதியைப் போற்றி வழிபடும் சமயம். இதில் கணபதியே முழுமுதற் கடவுள். கணபதியே எல்லாம் என்று சொல்லப்படுவது. சிவன்கோயில்கள் பலவற்றில் விநாயகரின் திருவுருவத்தை தரிசித்து மகிழ்ந்திருக்கிறோம். மூல முதல்வன், மூஷிக வாகனன், வேழ முகத்தோன் பற்பல வடிவங்களில் தனியாகக் கோயில் கொண்டு திகழ்வதையும் தரிசித்திருக்கிறோம். பஞ்சமுக கணபதி, ஹேரம்ப கணபதி என பாரதம் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து என இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் விநாயகப்பெருமான் கோயில் கொண்டு வந்தோரை வாழ்வித்து வரம் தரும் பெருமானாகத் திகழ்கிறார். தமிழக தலைநகராம் சென்னையில் விநாயகருக்கு பல கோயில்கள் உள்ளன. தனிக்கோயில்களும் உள்ளன. ஆனால், சென்னையின் மிகப் பரபரப்பான, மிகப் பழமையான இடம் சௌகார்பேட்டை பகுதியில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயில் மிகவும் வித்தியாசமானது. தனிச் சிறப்பான கோயிலும் கூட!
சென்னைக்குப் பெயர் சேர்க்கும் சென்னகேசவப் பெருமாள் கோயிலுக்குத் தென்புறம் உள்ள பகுதியில்தான் இந்தப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், தமிழில் விநாயக புராணம் அரங்கேற்றப்பட்ட இடம் என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கவி ராட்சசன் கச்சியப்ப முனிவர் என்பவர், திருவாவடுதுறை ஆதீனத்தின் முனிவராக இருந்தவர். இவரே, தமிழில் விநாயகப் புராணத்தை 6,000 பாடல்களுடன் இங்கே அரங்ககேற்றினார். பிரைட்டன் கந்தசாமி முதலியார் என்பவரால் அமைக்கப்பட்டு, அவருடைய காலத்தில் இருந்து இந்தக் கோயில் சிறப்புறத் திகழ்ந்து வருகிறது. சென்னையின் அடையாளமான கந்தசாமி கோயில் அருகே உள்ளது என்பதும் ஒரு சிறப்பு. இங்கு எல்லாமே விநாயகர் என்பதும், விநாயகப்பெருமானின் பரத்துவத்தைச் சொல்லும் வடிவங்களை ஒரே இடத்தில் நாம் தரிசிக்கலாம் என்பதும் இதன் சிறப்பம்சம்.
சோமாஸ்கந்தர் என்ற பெயரில் சித்திபுத்தி விநாயகர் வடிவம், நடராஜர் என்ற பெயரில் நர்த்தன கணபதி வடிவம், பள்ளியறைச் சொக்கன் என்ற பெயரில் வல்லபை கணபதியின் வடிவம் ஆகியவற்றுடன், மிகத் தனித்துவமாக, அங்குச கணபதியின் வடிவம் காண்போரை வசீகரிக்கும் அழகு வடிவமாகவும் திகழ்கிறது. இதனை அஸ்திரதேவருக்கு ஒப்பாகச் சொல்வார்கள். அங்குசம் மிகப் பெரிதாய் இருக்க, அதன் கீழ் விநாயகரின் நின்ற திருக்கோலம் அற்புத அழகு. திருவாதிரையில் நடராஜர் புறப்பாடு மாணிக்கவாசகர் உற்ஸவம் முதலியன சிறப்பாக நடைபெறுகின்றன. வியாபாரம் செய்ய வந்து, இந்தப் பகுதியில் கடை அமைத்தவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென கோயில்களை முதலில் அமைத்துக் கொண்டனர். அவ்வகையில், விக்னங்களைக் களைந்து, இடர்களை நீக்கி, வெற்றி எல்லாம் தரும் வேழமுகத்தானுக்கு தனித்துவமாக அமைக்கப்பட்டதே இக்கோயில். இதன் கருவறை விமானத்தில் அமையப்பெற்றுள்ள சிற்பங்கள், விநாயகரின் திருவிளையாடல்களைச் சொல்லும். ஔவையார், அகத்தியர், காவிரி என விநாயகர் தொடர்புடைய புராணங்களின் அம்சத்தில் அமைந்திருக்கின்றன. விநாயக சதுர்த்தி தினத்தன்று வெற்றி எல்லாம் தரும் வேழ முகத்தானின் பல்வேறு வடிவங்களை தரிசித்து அருளும் வளமும் பெற்று வாழ்வில் நலம் பெறுவோம்.