பதிவு செய்த நாள்
03
செப்
2016
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தெற்கு கோபுரத்தில் கும்பாபிஷேக திருப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், 8வது நிலையில், ஏழு அடி நீளமுள்ள பாம்பை கண்டு அலறியடித்து கொண்டு கீழே ஓடி வந்தனர். பின், தீயணைப்பு வீரர்களை கொண்டு, பாம்பு பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள, ஒன்பது கோபுரங்கள் உள்பட அனைத்து சன்னதிகளும் கும்பாபிஷேக பணிக்காக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில், அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்படும் தெற்கு கோபுரம் சீரமைக்கும் பணியில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம், எட்டாவது நிலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஏழு அடி உயரமுள்ள நாகப் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து கொண்டு கீழே இறங்கி வந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், கோபுரத்தின் மீது ஏறி பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது.