பதிவு செய்த நாள்
06
செப்
2016
11:09
சேலம்: சேலத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜகணபதி கோவில் உட்பட கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வீடுகள், பொது இடங்களில் 1,830 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலம் கந்தாஸ்ரமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று காலையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. தாதுபாய்குட்டை, ஓம்சக்தி வேம்ரசர் கோவில் விநாயகருக்கு விக்னேஹஷ்வர பூஜை உட்பட சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, கரிய சித்தி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. நெடுஞ்சாலை நகர், வரசித்தி விநாயகர் கோவிலில், 108 கலச ஸ்தாபனம், பூஜைகள் நடந்தன. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஜலகண்டாபுரம், வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பூஜை நடந்தது. ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில் நடந்த அபிஷேகத்தை தொடர்ந்து, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில், வெள்ளை விநாயகர் அருள்பாலித்தார். ஆத்தூர், ராணிப்பேட்டை விநாயகர், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள வெள்ளி விநாயகர், கடை வீதி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து, வெள்ளி கவச அலங்காரத்தில், விநாயகர் அருள்பாலித்தனர். இடைப்பாடி பஸ் ஸ்டேண்ட் அருகே சரபங்கா ஆற்றின் கரையோரம் உள்ள விநாயகருக்கு சில்லறை காசு மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
* மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி பகுதிகளில், பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். பின், மேட்டூர் காவிரியாறு, மேட்டூர் அணை பண்ணவாடி, சின்னமேட்டூர், கூனான்டியூர் நீர்பரப்பு பகுதியில், 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை, பக்தர்கள் கரைத்தனர்.
* பூலாம்பட்டி அருகே, கல்வடங்கம் காவிரி ஆற்றில், சங்ககிரியில், 88 சிலைகள், சேலம் சிட்டி, 9, ரூரல் பகுதி, 13, ஓமலூர், 61 சிலைகள், நாமக்கல் மாவட்டம், 10 என, 181 சிலைகள் கரைக்கப்பட்டன. பூலாம்பட்டி, காவிரி ஆற்றில், 55 என, 236 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
* பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, சமுதாய நலக்கூட வளாகத்தில் உள்ள, மங்கள விநாயகர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, 4 மணியளவில், 6 அடி உயர விநாயகர் சிலை கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, ஏத்தாப்பூர் ஜெகன் சிவாச்சாரியர் மூலம், சிறப்பு யாகம் நடந்தது.
* தலைவாசலில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு அதிகாலை முதலே, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து, கொழுக்கட்டை, அப்பம், மோதகம், சுண்டல் உள்ளிட்ட பொருட்களை படைத்து, பக்தர்களுக்கு வழங்கினர். இந்த ஆண்டு புது வடிவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி விநாயகர் சிலைகள், பக்தர்களை கவர்ந்தன.
* ஏற்காடு, லாங்கில்பேட்டை, டவுன், ஜெரீனாக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு, பூஜை செய்து, கண்கள் திறக்கப்பட்டன.
* ஓமலூர் பஸ் ஸ்டாண்டில், காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், பத்து அடி உயர, விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. காசிவிஸ்வநாதர் ஆலயம், அக்ரஹாரம் வைதீஸ்வரன் கோவில் மற்றும் காடையாம்பட்டி, கருப்பூர், தொளசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சேலத்தில் 776 சிலைகள்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாநகரில் 776 விநாயகர் சிலைகளும், மாவட்டத்தில் 1,054 விநாயகர் சிலைகள் என மொத்தம் 1,830 சிலைகள் பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.இந்த சிலைகள் நாளை முதல் அக்.,10ம் தேதி வரை, குமரகிரி ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, மேட்டூர் அணை, கல்வடங்கம் காவேரி ஆறு ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.