பதிவு செய்த நாள்
06
செப்
2016
11:09
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும், 799 சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், இந்து முன்னணி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில், 799 சிலைகள் அமைத்து பூஜை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி வழங்கிய இடங்களில், மூன்று அடி முதல், 10 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் அமைத்து, நேற்று காலை பூஜைகள் செய்யப்பட்டு, கண் திறக்கப்பட்டது. நாமக்கல் கணேசபுரம், பிள்ளையார் கோவில் தெருவில், சிவன் வடிவில் ஆஞ்சநேயர் சுவாமி அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், இரவு, 7 மணிக்கு, விநாயகர் உற்சவமூர்த்தி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 9 மணிக்கு, விநாயகர் கண் திறப்பு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6 மணிக்கு, மகா தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நாமக்கல் நகரில், குளக்கரை திடல், சேலம் சாலை, ப.வேலூர் சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, மோகனூர் சாலை என, நகரம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமி சிலைகள், சிங்கம், யானை, மயில், கருடன், மூஞ்சூறு மற்றும் பாகுபலி விநாயகர், யாழி வாகனத்தின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, கிருஷ்ணருடன் விநாயகர் இருப்பது என, பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. மாவட்டத்தில், காவிரி அமைந்துள்ள மோகனூர், ப.வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில், விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டு வருகிறது. மோகனூர், ப.வேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய பகுதிகளிலும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.