பதிவு செய்த நாள்
28
செப்
2011
12:09
முனிவர்கள் வைகுண்டத்துக்கு வந்தனர். வாசலில் ஜெயனும், விஜயனும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வாயில் காப்பவர்களே! ஸ்ரீமன் நாராயணனே எங்கள் குல தெய்வம். நாங்கள் அவரைக் காண நீண்டகாலம் தவமிருந்தோம். இன்று வைகுண்டத்தின் வாசலுக்கு வந்து விட்டோம். இது நாங்கள் பெற்ற பெரிய பேறு. நாராயணனை பார்த்து விட்டால் வைகுந்த பதவியும் பெற்று விடுவோம். பிறப்பற்ற இன்ப வாழ்க்கை பெற நாராயணனின் தரிசனமும், கரிசனமும் அவசியமல்லவா? வைகுண்டக்கதவை திறவுங்கள், என்றனர். வாயில் காப்பவர்கள் அவ்வளவு எளிதாக யாரையும் அனுமதிப்பார்களா? அவர்களிடம், நாராயணன் நீங்கள் வருவது பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அவரைப் பார்க்க நீங்கள் முன் அனுமதி பெற்றது பற்றிய தகவலும் இல்லை. உஹூம்...உங்களை அனுமதிக்க முடியாது. நீங்கள் போகலாம், என்றனர். முனிவர்கள் கெஞ்சிப் பார்த்தனர். தம்பிகளே! நீங்கள் இப்படி செய்வது முறையா? பூலோகத்தில் இருந்து கால் கடுக்க நடந்தே வந்தோமப்பா! நீ திரும்பச் சொல்கிறாயே! நாங்கள் தபஸ்விகள்...ஒன்றுமறியாதவர்கள் இல்லையப்பா!. ஜெய, விஜயர்கள் அசைந்து கொடுக்கவில்லை. நீங்கள் யாராயிருந்தால் எங்களுக்கென்ன? நாராயணன் சொல்லியுள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் போகலாம், என்றதோடு கழுத்தை பிடித்து வெளியே தள்ளினர். முனிவர்களுக்கு ஆத்திரம் வந்து விட்டது. கத்த ஆரம்பித்து விட்டனர். ஏ! நாராயணா! நீ பாற்கடலில் பள்ளி கொண்டு அப்படியே உறங்கிப் போய் விட்டாயா? உன் காவலர்கள் செய்யும் அட்டூழியம் கண்ணுக்கு புலப்படவில்லையா? இதுதான் நீ பக்தர்ளை வரவேற்கும் லட்சணமா? நீ எழுந்து வா! இல்லாவிட்டால் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம், என்று சத்தம் போட்டனர். நாராயணன் இதெல்லாம் தெரியாதவரா? தெரிந்து தானே நாடகமாடுகிறார்....அவர் பதறிப் போய் ஓடி வருவது போல நடித்தார். முனிவர்களே! என்ன நடந்தது? என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். முனிவர்கள் நாராயணனைக் கண்டதும் நடந்ததை மறந்து விட்டனர்.
அவரது கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினர். ஐயனே! தங்கள் தரிசனம் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த ஏழைகளின் அபயக்குரல் கேட்டு, ஓடோடி வந்த எம்பிரானே! தங்களைக் கண்டோம். ஆனால் எம்பிராட்டி லட்சுமி தாயாரை பார்க்க முடியவில்லை. வைகுண்டத்தின் வாசலே இப்படி அழகு பொங்க இருக்கிறது என்றால், உள்ளே இருக்கும் பாற்கடலின் அழகு, ஆதிசேஷன் தங்களுக்கு குடை பிடித்திருக்கும் அழகு இவற்றையெல்லாம் பார்த்திருக்கலாம். தாங்கள் எங்களை வைகுண்டத்துக்குள் அழைத்துச் செல்லுங்கள், என்றனர். முனிவர்கள் சொன்னதை நாராயணன் கவனமாகக் கேட்டுக் கொண்டார். ஜெய, விஜயர்களை அழைத்தார். முட்டாள்களே! என்னைக் காண வருபவர்களின் தராதரத்தை அறிந்து அவர்களை அனுமதிக்க வேண்டாமா? வைகுண்டத்திற்கு முதன் முதலாக வந்த அவர்களைத் தடுத்து, நிறுத்திய நீங்கள் மனிதர்களாக பிறப்பீர்களாக, என்றார். ஜெய, விஜயர்கள் நாராயணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். நாராயணன் மசியவில்லை. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். நீங்கள் பூலோகத்தில் கொடியவர்களாக பிறந்து, என்னையே எதிர்த்து போரிட்டு மடிந்தால் மூன்று பிறவி எடுக்க வேண்டும். நல்லவர்களாகப் பிறந்தால், ஏழுபிறவி எடுக்க வேண்டும். இதில் எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், என்றார். அப்படியே முனிவர்கள் பக்கம் திரும்பி, முனிவர்களே! தாங்கள் தபஸ்விகள். எனவே கோபம் உங்களை விட்டு ஒழிந்திருக்க வேண்டும். உங்களை வாயில் காப்பவர்கள் தடுத்தனர் என்பதற்காக, ஆத்திரத்தில் சத்தம் எழுப்பி, வைகுண்டத்தின் அமைதி குலைய காரணமாக இருந்தீர்கள். நீங்கள் பூலோகத்தில் எனது பக்தர்களாக பிறந்து, கோபத்தை ஒழித்து வைகுண்டம் திரும்ப வேண்டும், எனச் சொல்லி விட்டு மறைந்தார். அவர்களில் ஒருவர் தான் பிரகலாதன் என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். ஜெயன் இரண்யகசிபு என்ற பெயரிலும், விஜயன் இரண்யன் என்ற பெயரிலும் சகோதரர்களாக பூமியில் தோன்றினர். இரண்யகசிபுவை திருமால் வராக அவதாரம் எடுத்துக் கொன்றார். இரண்யன் கடும் தவத்தால், பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். தன்னை எப்பேர்ப்பட்ட பலசாலியும் எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என்ற வரம் பெற்றான். இதனால் இவன் உலகையே ஆளும் மன்னன் ஆனான்.
எல்லாரும் இரண்யாய நமஹ என்று சொல்லும்படி கட்டளையிட்டான். இவனது வயிற்றில் பிறந்தான் பிரகலாதன். திருமாலின் பக்தனாக வளர்ந்தான். இரண்யாய நமஹ என்பதை சொல்ல மறுத்து விட்டான். உலகைக் காக்க ஒரு மனிதனால் முடியாது. காக்கும் கடவுளான விஷ்ணுவால் மட்டுமே முடியும், என்று அவன் தந்தையிடம் வாதிட்டான். குருகுலத்திற்கு சென்று மற்ற பிள்ளைகளுக்கும் ஓம் நாராயணாய நமஹ, என்றே சொல்லிக் கொடுத்தான். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் தினமும் சண்டை தான். மகனை கொன்றுவிடும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் விஷம் கொடுத்தும், கடலில் தூக்கி வீசியும் கூட பிரகலாதன் அழியவில்லை. கலங்கிப் போன இரண்யன், ஒருமுறை,இந்தத் தூணில் நாராயணன் இருக்கிறானா? எனக் கேட்டான். தூணில் என்ன? உங்கள் உடம்பில் ஒட்டியிருக்கும் சிறு தூசியில் கூட அவன் தான் இருக்கிறான், என்றான் மகன். ஆத்திரத்தில் தூணை எட்டி உதைத்தான் இரண்யன். தூண் உடைந்தது. உள்ளிருந்து நரசிம்மராக வெளிப்பட்டார் பகவான். பாதியளவு சிங்கத்தின் உருவம், பாதியளவு மனித உருவத்துடன் உருவெடுத்து வந்தார் அவர். இரண்யனுடன் போரிட்டுக் கொன்றார். ஆயுதம் ஏதும் அவர் கொண்டு வரவில்லை. அவரது நகமே ஆயுதமாயிற்று. நகத்தால் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டார். பெற்ற தந்தை தன்னால் தானே அழிந்தார் என கதறி அழுதான் பிரகலாதன். தாயை அமங்கலி ஆக்கி விட்டோமே...அவள் முகத்தில் எப்படி விழிப்பது? கதறி அழுத பிரகலாதனை அள்ளி அணைத்துக் கொண்டார் நரசிம்மர். பிரகலாதனிடம் முற்பிறவி கதையை எடுத்துச் சொன்னார். இருந்தாலும் அவன் மனம் தாங்கவில்லை. அன்னையோ தீக்குளிக்க தயாரானாள். பிரகலாதனை பார்க்கக் கூட அவள் விரும்பவில்லை. இறைவா! உன்னை நம்பிய என் நிலையை பார்த்தாயா? என் தந்தைக்கு உயிர்கொடு. இனியும் மானிடனாய் பிறக்கச் செய்யாதே! என பிரார்த்தித்தான். அவர்களை குடும்பத்துடன் வைகுண்டம் அழைத்துச் சென்றார் பெருமாள். பிரகலாதன் இன்றும் சரித்திரத்தில் வாழ்கிறான்.
கருவிலே திருவுடையவனாகத் திகழ்ந்தவன் பக்த பிரகலாதன். நாராயணா எனும் நலந்தரும் நாமத்தைத் தாயின் கருவில் இருக்கும்போதே செவிமடுத்தவன். ஆதிநாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் என்று திண்ணமாக உரைத்திட்ட அறிஞரில் தூயோன் அவன்.
இறைவனை இகழ்ந்திட்ட இரணியன் மகனாயினும், பிரகலாதன் ஞானியரும், யோகியரும் போற்றும் சிறந்த பக்தன். அவன் அறிஞரில் அறிஞன்! தந்தை சொல்மிக்க மந்திரம் உண்டு, அது ஓம் நமோ நாராயணாய எனும் அரிய மந்திரம் என்று தந்தைக்கே உபதேசித்த ஞானநாயகன்.
காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச்செய்வதும், செந்தழல் முகுந்த
ஓம கேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னதுகேள் நமோ நாராயணாய
தவம் இயற்றிப் பிரமனிடம் வரங்கள் பல பெற்றவன் இரணியன். தன் வர பலத்தினால், தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்திவந்தான். தன் தம்பி இரணியாட்சனை அழித்த திருமால் மீது தீராப்பகை கொண்டிருந்தான்.
ஓம் இரண்யாய நம! என்று கூறி அனைவரும் தன்னையே தெய்வமாக வணங்க வேண்டும் என்று ஆணையிட்டான். எல்லோரும் பயந்து, பணிந்து நடந்தபோது, தன் மகனே தனது பரமவைரியின் பரமபக்தனாக இருப்பது கண்டு வெகுண்டான். சினம் தலைக்கேற பிரகலாதனைக் கொல்லக் கட்டளையிடுகிறான். வீரர்கள் தீமூட்டி அரசகுமாரனை அதில் இறங்கச் செய்கின்றனர். அரி என்று கூறி தீயிறங்கிய பிரகலாதனுக்கு. தீயில் இறங்கியபோதுகூட குளிர்சந்தனம் அப்பியதுபோன்ற அனுபவம் கிட்டியது என்றால் நாராயண நாம மகிமை பற்றிச் சொல்ல வார்த்தை ஏது? பிரகலாதனை மிதிக்க விடப்பட்ட யானை அவனை வணங்கிச்சென்றது. கடிக்க வந்த பாம்புகளுக்குப் பற்கள் இற்று வீழ்ந்தன. இரணியன் செய்த முயற்சிகள் அடுத்தடுத்துத் தோற்றன.
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம் என்பது நரசிம்ம மந்திரத்தின் ஒரு பகுதி. ஆம். இறைவன் கூற்றுக்கும் கூற்றாவான். சிறுவன் பிரகலாதனை மரணத்தின் பிடியிலிருந்து மாதவன் காத்து ரட்சித்தார். இப்படி பக்தனுக்ககாக துண் பிளந்து வெளிப்பட்டது நரசிம்மம்.
ஹரி, ஹரி, ஹரி என்று எப்போதும் முப்போதும் ஜபித்துக்கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து இரணியன் ஹரி எங்கிருக்கிறான் என்று கேட்கிறான். அதற்கு அச்சிறுவன்.
சாணிலும் உளன்; ஓர் தன்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக்
குன்றிலும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன
சொல்லிலும் உளன்
என்று விடை தருகிறான். நன்று நன்று எனக் கூறி ஒரு தூணை எற்றுகிறான் இரணியன். அப்போது தூண் இரண்டாகப் பிளந்து, திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் இரணியன், பிரம்மனிடம் கேட்டு வாங்கிய வரத்தை வழுவா வண்ணம், நரசிம்மன் அவன் கதையை முடித்தார். சீற்றம் தணிந்தார். பிரகலாதனை நோக்கி, உன் குலத்தாரை இனிக்கொல்லேன் என்றும், முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும் உன்நாள் உலவாய் நீ: என் போல் உளை என்றும் அருளி, சிரஞ்சீவித்துவம் அளித்தார்.
ஆம்; இறைவன் பக்திக்குக் கட்டுப் பட்டவன். பக்திக்கு வயது வரம்பு இல்லை. அறுபது வரை காத்திருக்க வேண்டாம். ஆறிலேயே தொடங்கலாம் என்பதை உணர்த்துகிறார்கள். மார்க்கண்டேயனும், பிரகலாதனும், வயதில் சிறியவர்கள்தான்; ஆனால், பக்தியில் மிகமிகப்பெரியவர்கள்!