பதிவு செய்த நாள்
08
செப்
2016
12:09
கோவை : இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியல் வகை கோவில்களில், சிறப்பு தரிசனத்துக்கு இலவசமாக அனுமதி வழங்கக்கூடாது என, அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பட்டியல் முதல் வகையை சேர்ந்த இணை மற்றும் துணை கமிஷனர் அந்தஸ்திலுள்ள கோவில்களில், அன்றாடம் பல்வேறு கட்டணங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு தரிசனத்தில் எளிதாக சுவாமி தரிசனம் செய்து, திரும்ப திட்டமிட்டு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் கட்டணம் செலுத்தாமல், சிபாரிசு அடிப்படையிலும், அறநிலையத்துறை மண்டல அலுவலகங்கள் மற்றும் செயல்அலுவலர்களிடமிருந்து கடிதம் பெற்றும் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நடைமுறையினால், கோவிலுக்கு வரும் வருவாயில் இழப்பு ஏற்படுவதோடு, கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் மேற்கொள்ள வரும் பக்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் செயலருக்கு சென்ற புகாரின் அடிப்படையில், அந்த நடைமுறையை மாற்றியமைத்தனர். அறநிலையத்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பட்டியல் முதல் வகையை சேர்ந்த கோவில்கள், இணைகமிஷனர் மற்றும் துணைகமிஷனர் அந்தஸ்தில் இயங்கும் கோவில்களில், சிபாரிசு கடிதத்துடன் வரும் பக்தர்களை இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது. அவர்களிடம் குறைந்த பட்ச கட்டணமாவது பெற்றுக்கொண்டு, அதன் பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இலவசமாக அனுப்பக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதோடு சிபாரிசுக்கடிதங்களை, செயல்அலுவலர்களோ, இணை மற்றும் துணைகமிஷனர்களோ, மண்டல அறநிலையத்துறை அலுவலக மேலாளர்களோ வழங்கக்கூடாது. எந்தச்சூழலிலும் அறநிலையத்துறை இலவசத்தை அனுமதிக்கக்கூடாது என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் இலவசமாக, சிறப்பு தரிசனம் செய்ய வி.ஐ.பி.,க்களையோ, சாதாரண மக்களையோ அனுமதிப்பதில்லை. ஆனால், சாதரண தரிசனத்துக்கு வழக்கம் போல், வரிசையில் நின்று இலவசமாக சுவாமியை தரிசிக்கலாம். இதற்கான அறிவிப்பு பலகைகள் ஒவ்வொரு கோவில் முகப்பிலும் வைக்கப்பட்டுள்ளன.