பதிவு செய்த நாள்
08
செப்
2016
12:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டுக்காகான திருவிழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. திருவிழாவையொட்டி, தினமும் இரவில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கு பெறும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கிட்டம்பட்டி, மாட்டான்மந்தை, பத்திரிகான்கொட்டாய் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும், இந்த பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாண வேடிக்கை நடந்தது.