பதிவு செய்த நாள்
09
செப்
2016
11:09
குன்னுார்: குன்னுார் அருகே, அருவங்காடு பாய்ஸ் கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், ஆண்டு பெருவிழா விமர்சையாக நடந்தது. குன்னுார் அருகே, அருவங்காடு பாய்ஸ்கம்பெனி ஆரோக்கிய அன்னை தேவாலய ஆண்டு திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை, திருச்சி அமல ஆசிரமத்தை சேர்ந்த குருக்களால் நவநாள் திருப்பலி, மறையுரை வழங்கப்பட்டது. விழா நாளான நேற்று, காலை ஊட்டி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில், கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு தேவாலங்களை சேர்ந்த குருக்கள் பங்கேற்றனர். மாலை மறைமாவட்ட புதிய குருக்கள் தலைமையில் திருப்பலி நடந்தது. அதைதொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் தேவ அன்னை பவனி சென்றார். தேவாலயத்தில் புறப்பட்ட பவனி, பாண்டு வாத்திய இசை முழுங்க, பாய்ஸ்கம்பெனி, கேட்டில்பவுன்ட், அருவங்காடு வெடிமருந்து தொழிலாக குடியிருப்புகள் வழியாக, மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. தேர்பவனியை ஒட்டி கோபாலபுரம் இளைஞர்கள் மன்றம், பாய்ஸ் கம்பெனி ஆட்டோ ஓட்டுநர்கள், அருவங்காடு பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே, மாதாவின் சொரூபம் தாங்கிய அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவை ஒட்டி, தேவாலயம் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு நற்கருணை ஆசியுடன், விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, தேவாலய பங்கு குரு ஜார்ஜ டேவிட், உதவி குரு ஜார்ஜ் ஆனந்த் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.