பதிவு செய்த நாள்
09
செப்
2016
11:09
சென்னை: கோடம்பாக்கம், தேவி கருமாரியம்மன் பிரத்தியங்கரா தேவி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னை, கோடம்பாக்கம், ஆண்டவர் நகரில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் பிரத்தியங்கரா தேவி கோவில். மூலவராக தேவி கருமாரியம்மனும், உற்சவராக பிரத்தியங்கரா தேவியும் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலின் சிறப்பாக ஒவ்வொரு அமாவாசை அன்றும் உஞ்சல் சேவை நடக்கிறது. ஆடிப்பூரத்தின்போது, அம்மனுக்கு லட்சத்தி எட்டு வளையல் அலங்காரம் வெகு விமர்சையாக நடக்கும். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சரிபேஸ்வரர், ஷீரடி சாய்பாபாவிற்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 7ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு, கும்ப அர்ச்சனை ஆராதனை நடந்தது. பின், வஸ்திரார்ப்பணம், பூர்ணாஹுதி நடந்தது. காலை, 10:30 மணிக்கு கலசங்களில் கும்ப நீர் சேர்த்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சரபேசுவரர் சன்னதி, 10 ஆயிரத்தி எட்டு ருத்ராட்சத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவர் சன்னிதியில் உற்சவர் பிரத்தியங்கரா தேவிக்கு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.