பதிவு செய்த நாள்
09
செப்
2016
12:09
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்களில், 1,500 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 5ம் தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட, விநாயகர் சிலைகளை, நேற்று முன்தினம் இருந்து, அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இதில், அந்தந்த பகுதியில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை, குறிப்பிட்ட தேதிகளில், வருவாய்த்துறையினர் தேர்வு செய்த இடங்களில் கரைக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். மோகனூர், ப.வேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில், காவிரி ஆற்றில் கரைத்து வருகின்றனர். மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்களில் மட்டும், 1,500 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் வருவாய் வட்டங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், கரைக்கப்பட்டுவிட்டன. நாமக்கல் பகுதியில், நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில், இந்து முன்னணி சார்பில், வைக்கப்பட்டிருந்த, 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பலபட்டறை மாரியம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.