மலையாள ஆண்டின் முதல் மாதமான ஆவணியில் ஓணவிழா பத்துநாள் கொண்டாடப்படுகிறது. ஓணத்தின் முதல் நாளான அஸ்தம் நட்சத்திரத்தன்று மஞ்சள் நிற மலர்களால் கோலமிடுவர். மகாபலி வாழ்ந்த இடமான திருக்காக்கரை கோவிலில் சிறப்பு பூஜையும், திருப்புணித்துராவில் நடக்கும் யானை ஊர்வலமும், நாட்டுப்புற நடனமும் நடக்கும். இரண்டாம் நாளான சித்திரையன்று ஆரஞ்சு, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிப்பர். மூன்றாம் நாள் சுவாதியன்று நான்கு அல்லது ஐந்து நிற மலர்களால் கோலமிடுவர். நான்காம்நாளான விசாகத்தன்று ஊரெங்கும் பூக்கோலப் போட்டி நடத்தப்படும். ஐந்தாம் நாளான அனுஷத்தன்று வல்லம் களி என்னும் படகு போட்டி நடக்கும். ஆறாம் நாளான கேட்டையன்று மக்கள் தங்களின் உறவினர் வீடுகளுக்குச் செல்வர். இந்நாளில் பெரிய பூக்கோலமிடுவர். ஏழாம் நாளான மூலத்தன்று முகமூடி அணிந்தாடும் புலிகளி, கைகொட்டி என்னும் நடனங்கள் நடக்கும். ‘ஓண சத்ய’ என்னும் பாரம்பரிய விருந்து இந்நாளில் பிரதானம். எட்டாம் நாளான பூராடத்தன்று மகாபலி பூலோகம் வரும் நாள் என்பதால் அந்நாளில் பூக்கோலமிட்டு அதன் நடுவில் மகாபலி சிலையை எழுந்தருளச் செய்வர். ஒன்பதாம் நாளான உத்திராடத்தன்று மகாபலி தன் நாட்டு மக்களின் வளம் மிக்க வாழ்வைக் கண்டு மகிழும் வகையில் மகாபலியாக வேடமிட்டு உலா வருவர். விழாவின் நிறைவான திருவோணத்தன்று வாமன மூர்த்தி மகாபலியை பாதாள உலகிற்கு அனுப்புவதாக கருதி பெருமாளை வணங்குவர்.