பதிவு செய்த நாள்
13
செப்
2016
12:09
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில், புனிதர் அன்னை தெரசாவின் திருவுருவச் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. விண்மின் தேவாலயம் அருகே, அன்னை தெரசா பெயரில், 10 ஆயிரம் பேர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் விடுதியையும், அன்னை தெரசாவின் திருவுருவச் சிலையையும், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திறந்து வைத்தார். கோல்கட்டாவில் உள்ள புனித மரியாள் பள்ளியில், புவியியல் ஆசிரியை பணியை, அன்னை தெரசா செப்., 10ல் தான் துவக்கினார். அதை நினைவுகூரும் வகையில், நேற்று அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக, வேளாங்கண்ணி பேராலயம் சார்பில், ஆரோக்கிய மாதா தேவாலய முகப்பில் இருந்து, அன்னையின் திருவுருவச் சிலை, பேண்ட் வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர், உதவி பாதிரியார் ஆரோக்கியசுந்தரம் உட்பட ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயணிகள் தங்கும் இலவச விடுதியில், அன்னை தெரசாவின் பெயரில், சனிக்கிழமைதோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.