பதிவு செய்த நாள்
13
செப்
2016
12:09
துவக்கமான மொகரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும் மாபெரும் தியாகங்கள் உள்ளடக்கிய மாதங்கள்.இப்ராஹிம் நபிக்கு, சாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு, 85 வயது ஆனபோது, ஹாஜிரா மூலம் ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர், இஸ்மாயில் நபி. சில ஆண்டுகள் கழித்து, சாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்ஹாக் நபி. ஒருமுறை, இப்ராஹிம் நபி (அலை)யுடைய கனவில், இறைவன் தோன்றி, உம்முடைய மகன், இஸ்மாயிலை, என் பெயரால் அறுத்து, பலி இடு என்று கட்டளையிட்டான். இறைத் துாதருக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை), தன் கனவைப் பற்றி, மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.
அதற்கு அந்த பிள்ளை, தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன் என, கூறினார். என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்!பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்திற்குச் சென்றார். பிள்ளைப் பாசம் தடுக்காமல் இருக்க, தன் கண்களை, துணியால் கட்டி மகன் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார்.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனை தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி... என்று தன்னை சோதித்த இறைவனுக்கு, நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்). இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை, ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்... என்று சொன்னார்.அந்த தன்னலமற்ற தியாகங்களை நினைவு கூரும் நாளாக, இன்றைய தியாகத் திருநாள் மலரட்டும். இறைவனுடைய படைப்பிலேயே, மிகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால், படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை, நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே பரிகாசம் செய்வது போலாகும். நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.
நம் மனதில் மறைந்து கிடக்கும், நானே மேலானவன் என்ற மமதையை, மாடுகளுடன் சேர்ந்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், ஆடம்பரம், அகம்பாவம் இவற்றின் ஆணவக் கூடுகளை, ஒட்டகங்களுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். இந்த தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம். இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிறைந்த அன்புடையோனே... தீர்ப்பு நாளில் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயா... அமீன்! அன்பு, பாசம், சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனித நேயம், மத நல்லிணக்கம் ஏற்படுத்த செய்வாயாக... ஆமின்! நன்றியும், கருணையும், உதவும் மனோபாவமும் நம் மனங்களில் சுரக்கச் செய்வாயாக... ஆமின்! இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து தான், இன்றைய நாளை, தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும், உலகம் முழுக்க இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் கடைபிடிக்கின்றனர். இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
இறைவனுக்கு பிடித்த குர்பானி: உள்ளத்தின் ரகசியங்கள் அனைத்தையும், ஊடுருவி அறியும் வல்லமை பெற்ற இறைவனிடத்தில், மன துாய்மையைக் கொண்டு, எல்லா வழிபாடுகளும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு, நபியே நீர் கூறும் நிச்சயமாக, என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும், உலகத்தை படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கே உரியவை எனும் திருக் குர்-ஆனின் வசனமே ஆதாரம். எந்தக் குர்பானியானது, இறைவனின் திருப்பொருத்தத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதோ, அதுவே அவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், குர்பானி என்று கூற தகுதி உடையதாகவும் இருக்கும் என்பதையே, இந்த வசனம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு பின், குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானி இறைச்சியை, மூன்று சம பங்காக பிரித்து ஒரு பங்கை தனக்கும், இன்னொன்றை உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.குர்பானி, மூன்று தினங்களில் கொடுக்கலாம். அவை துல்ஹஜ் மாதம், 10, 11, 12ம் தேதிகளாகும். அதாவது, பக்ரீத் பண்டிகையின், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளாகும். கூட்டமாக ஏழு பேர் சேர்ந்து, ஒவ்வொருவரும், ஒரு உரிய தொகையை செலுத்தி, ஒரு மாட்டை அல்லது ஒட்டகத்தை வாங்கி, குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு, பின்வரும் நபி மொழிஆதாரம். மாட்டிலும், ஒட்டகத்திலும் குர்பானி கொடுக்க, எங்களுள் ஏழு பேர் சேர்ந்து கொள்ளுமாறு, நபி (ஸல்) கட்டளையிட்டார் என்று, ஜாபீர் (ரலி) அறிவித்துள்ளார். (நுால் முஸ்லிம்) இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, நபிகள் நாயகம் (ஸல்) இந்நாளில், நீங்கள் அனைவரும், அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார்.
- எஸ்.அஸ்லம் பாஷா
அந்த அழைப்பு ஓசை...: இறைவனின் நேசத்தை பெற்ற தீர்க்கதரிசியான நபி இப்ராஹிம் (அலை) அவர்களும், அவர்களுடைய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களும் இணைந்து இறை இல்லமாம் காபத்துல்லாவை கட்டி முடித்து, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து இந்த திருப்பணியை ஏற்றுக் கொள்வாயா... என்று பிரார்த்தித்தனர். அதற்கு இறைவன், இப்ராஹிமே! உலக மக்களுக்கு இந்த காபத்துல்லாவின் பக்கம் ஹஜ்ஜுக்காக வேண்டி அழைப்பு கொடுப்பீராக... என்று கட்டளையிட்டான். அதைக் கேட்ட உடனே, இப்ராஹிம் (அலை) அபு குபைஸ் எனும் மலைக்குன்றின் மீது ஏறி நின்று ஹஜ்ஜுக்காக வேண்டி அழைப்பு கொடுத்தனர். அந்த அழைப்பு ஓசையை, உயிர்களாக இருந்த ஆன்மாக்களின் பக்கம் இறைவன் ஏத்தி வைத்தான். 4,000 ஆண்டுகளுக்கு மேல் காபாவை நோக்கி, அரபி மாதத்தின், 11வது மாதமாகிய துல்ஹாதா மாதத்திலிருந்தே அந்த அழைப்பு ஓசையை கேட்ட, உலக முஸ்லிம்கள் அணி அணியாக சென்று கொண்டே இருக்கின்றனர்.
இறைவன் படைத்த காலங்களில், வருடத்தில் பன்னிரெண்டு மாதங்கள். இந்த உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே கணக்கிடப்பட்டு வருகிறது. அதில், நான்கு மாதங்கள் புனிதமானவை என்று, வான்மறை குர்ஆன் மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. அவை துல்ஹாதா, துல்ஹஜ், மொகரம், ரஜப் ஆகிய மாதங்கள். இந்த மாதங்களில் போர் புரிவது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்ட ஒன்றாகவே, 4,000 ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. புனிதமான இறை இல்லமாம் காபாவை நோக்கி ஹஜ்ஜுக்காக செல்லும் பயணிகள் எந்தவித அச்சமுமின்றி நிம்மதியாக சென்று வர வேண்டும் என்று கடைபிடிக்கப்படும் ஒரு வழிமுறை.உம்ராஹஜ் செய்வதற்கு முன், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் செல்லக்கூடிய ஹாஜிகள் முதல் முதலாக செய்யும், ஒரு அமல் உம்ராவாகும். குறிப்பிட்ட எல்லையிலிருந்து இஹ்ராம் வெள்ளை நிறத்தில் இடுப்பு வேட்டியும், உடலின் மேல் ஒரு துண்டும் அணிந்து, காபாவை நோக்கி செல்வர்.
அப்போது, இதோ வந்து விட்டேன் இறைவா. உன் அழைப்பை ஏற்று, உன் இடத்திற்கு வந்து விட்டேன் இறைவா. உனக்கு இணை துணை கிடையாது புகழ் அனைத்தும் உனக்கே உரியது. அருள் அனைத்தும் உன்னுடையதே என்ற, தல்பியா முழங்கியவர்களாக காபாவின் வாசலில் நுழைவர். காபாவை ஏழுமுறை வலம் வந்ததற்கு பின், மகாமே இப்ராஹிம் எனும் இடத்தில், இரண்டு ரகாத் தொழுத பின், புனிதமான ஜம்ஜம் தண்ணீரை அருந்திவிட்டு ஸபா, மர்வா என்ற இரு சிறிய மலைக் குன்றுகளுக்கு மத்தியில், ஸயி எனும் தொங்கோட்டம் ஏழு முறை செல்வர். அதன்பின் ஆண்கள் தலைமுடியை மழித்தும், பெண்கள் கொஞ்சம் தலைமுடியை கத்தரித்தும் கொள்வர். இந்த அமல்களுக்கு உம்ரா என்று பெயர். இத்துடன் ஒரு ஹாஜி தன் உம்ராவை நிறைவு செய்கிறார். ஹஜ்ஜுடைய ஐந்து நாட்கள்துல்ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் ஹாஜி ஹஜ்ஜுக்காக வேண்டிய நிய்யத் செய்து, இஹ்ராம் அணிகிறார். நேராக, மினா எனும் விசாலமான மைதானத்திற்கு சென்று தங்குகிறார். அங்கு லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜர் என ஐந்து வேளையும் தொழுகிறார். சூரிய உதயத்திற்கு பின் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் காலை அரபா எனும் வெட்ட வெளியை நோக்கி பயணமாகிறார். அங்கு சென்று லுஹர், அஸர் இரண்டு நேரத் தொழுகையையும் ஒன்றாக தொழுகிறார். துல்ஹஜ் ஒன்பதாம் நாள், அரபாவில் தங்குவதையே ஹஜ் என்ற நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளர்.அன்று சூரியன் அஸ்தமான பின் மக்ரிப் தொழாமல் முஸ்தலிபா எனும் மைதானத்தை நோக்கி செல்கிறார். அங்கு இரவு தங்கி இறைவனை தியானிக்கிறார். மறுநாள் துல்ஹஜ் பத்தாம் நாள் பஜர் உடைய தொழுகையை அங்கு தொழுது விட்டு, மீண்டும் மினாவை நோக்கி பயணமாகிறார்.
மினாவில் சைத்தான் மீது கல் எறிகிறார். பின், குர்பானி கொடுக்கிறார். அதன் பின் தலைமுடியை மழித்துக் கொள்கிறார். பெண்கள் சிறிது அளவு தலை முடியை கத்தரித்துக் கொள்கின்றனர். பின், குளித்து சாதாரண ஆடைகளை அணிந்து, அங்கேயே இரண்டு நாட்கள் தங்குகின்றனர். துல்ஹஜ் 11, 12 தேதிகளில் மீண்டும் சைத்தான் மீது கல்லெறிந்து விட்டு, காபாவை நோக்கி பயணம் ஆகிறார். காபாவை ஏழு முறை வலம் வருகிறார். அதன் பின் மகாமே இப்ராஹிம் எனும் இடத்தில், இரண்டு ரகாஅத் தொழுகிறார். அங்கிருந்து ஸபா, மர்வாவிற்கு சென்று ஏழு முறை தொங்கோட்டம் ஓடி, தன்னுடைய ஹஜ்ஜை நிறைவு செய்கிறார். இதுவே ஹஜ்ஜுனுடைய ஐந்து நாட்கள் என்று அழைக்கப்படுகிறது.எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற அருள் புரிவானாக!- ஏ.முஹம்மது சுலைமான்
மறக்காத வாழ்வு:
உன்னைக் காணும்
நாளுக்காக காத்திருக்கிறோம்.
நீயோ எம்மை நாளும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
நாம் உன்னை நினைக்காத
கணங்கள் உண்டு.
ஆனால்... நீ
நம்மை மறந்த பொழுது இல்லை.
இறக்கும் பொழுது உன்னை
மறக்காத வாழ்வை கொடு...
- மஸ்ஹர் பாஷா
பழியை அழி
இஸ்லாம்
எங்கள் வழி
இந்தியா எங்கள் விழி.
அன்பு
எங்கள் மொழி
அமைதி எங்கள் சுழி.
எதற்கு
எம்மீது பழி?
இன்று
இனிதாய் அதை அழி...
- அக்பர்
மலர் கனவுகள்
யார் போட்டது
எல்லைகள்?
எல்லாரும்
உன் பிள்ளைகள்.
தீர்த்து விடு
தொல்லைகள்.
திறந்து விடு
மனக் கதவுகள்.
பிறந்து விட
மலர் கனவுகள்.
- அன்வர் பாஷா
ஒரு தாயின் கண்ணீர்
ரம்ஜான் மாதத்தில், பெருநாளுக்கு முன் வரும், கடைசி, 10 இரவுகள் மிகவும் முக்கியமானவை. அதை போலவே, தியாகத் திருநாள் (பக்ரீத்)க்கு முன் வரும், 10 நாட்களும் மிகச்சிறந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தொழுகை, ஜிக்கிர் செய்தல், குர் - ஆன் ஓதுதல், நோன்பு வைத்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல், இவற்றுடன் ஹஜ் செல்பவர்களுக்கு அந்த நன்மையும் கிடைக்கும். இஸ்லாமியர் காலண்டர்படி, ஆண்டின் கடைசி மாதம் ஜில்ஹஜ். இந்த மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் நற்செயலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாளான, ஒன்பதாவது நாள், மிகவும் முக்கியமான நாளாகும்.அன்று நோன்பு வைப்பது சிறந்தது. அன்று தான், ஹாஜிகள் (புனித பயணிகள்) அரபாத்தில் உள்ள, உயரமான குன்றில் திரண்டு, இறைவனை பிரார்த்திக்கின்றனர். இறைவனிடம் கையேந்தி அழுது, தொழுது பாவ
மன்னிப்பு கேட்கின்றனர். தம்முடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும், இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர். இந்த நிகழ்வு தான், ஹஜ்ஜின் முக்கிய கட்டமாகும். இந்த கால கட்டத்தில், நாம் அதிகமாக கண்ணீர் சிந்தி, இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை, வரலாற்றை திருப்பிப் பார்த்தால் தெரியும். இப்ராஹிம் நபி, அவர்களின் மனைவி ஹாஜிரா அம்மையார், தம் குழந்தை இஸ்மாயிலுக்கு தாகம் தீர்க்க, தண்ணீரைத் தேடி, பாலைவனப் பகுதியில் ஸபா - மர்வா என்கிற குன்றுகளுக்கிடையே ஓடினார். தன் பிள்ளை தாகத்தில் துடிக்கிறதே என்று, கண்ணீர் சிந்தினார். இறைவனின் கருணையால், அங்கே இஸ்மாயிலின் கால் அடியில், ஒரு நீர் ஊற்று உண்டானது. அது நிற்காமல், தண்ணீர் தொடர்ந்து பாய்ந்து வருவதை கண்ட ஹாஜிரா அம்மையார், அதைப் பார்த்து, ஸம்... ஸம்... (நில்... நில்...) என்றார். அந்த நீர் ஊற்று தான், ஸம்ஸம் கிணறாக திகழ்கிறது. உலகில் உள்ள அனைவரும், ஸம்ஸம் நீரை, ஒரு மிடறாவது குடித்திருப்பர். அதுதான், அந்த தாயின் கண்ணீரின் வலிமை. அது தண்ணீராக மாறி, உலகின் ஆன்ம தாகத்தை தீர்ப்பதுடன், பிரார்த்தனையின் வலிமையையும் நமக்கு உணர்த்துகிறது. ஆக, இந்த, 10 நாட்களில், மிக அதிகமாக பிரார்த்தனை செய்து நன்மையை பெறுவோம்.- ஜே.நுாருத்தீன்
மனிதனை மாற்றும் புனிதப் பயணம்!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்புக்குரியவை. புனித ஹஜ் கடமையாவது எல்லா விதத்திலும் சிறப்பானது; வித்தியாசமானது. முறையாக மேற்கொள்ளப்படும் புனித ஹஜ், ஹாஜிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைவது உறுதி.இறை நம்பிக்கை, இறை வழிபாடு, தியானம், பிரார்த்தனை, தியாகம், சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், அடக்கம், பணிவு, எளிமை, மார்க்கப்பற்று, முன்னோர்கள் மீதான மதிப்பு, நுகர்வு பற்றிய மதிப்பீடு, சக மனிதர்கள் மீது பச்சாதாபம், இன, மொழி, பிராந்திய வேற்றுமைகளை மறத்தல், படைத்தவனே நிஜம், மற்றெல்லாம் மாயை என்ற ஆன்மிக உணர்வு... இப்படி ஏராளமான உயர் கோட்பாடுகளின் சங்கமமே புனித ஹஜ்.ஊரை மறந்து, உற்றார் உறவினரை மறந்து, தொழிலை மறந்து, பொருளை மறந்து, லட்சக்கணக்கானோர் மத்தியில் இருந்தாலும் அனைவரையும் மறந்து, ஏக இறைவனின் அன்புக்காக ஏங்க வைக்கும் நாட்களே ஹஜ் நாட்கள்! இறைமறை இறங்கிய இடம், இறை துாதர் பிறந்த மண், அந்த இடம் புனிதம், அந்தக்காற்று புனிதம், அந்த வான்வெளி புனிதம், அந்த மாதம் புனிதம், அந்த நாள் புனிதம், அந்த மண், நீர், மரம், செடி, கொடி, காய்கனி, பேரீச்சங்கனி, குப்ஸ் (கோதுமை ரொட்டி) ஒட்டகம், வயல்வெளி, தோட்டம் எதையும் மறக்க முடியாது. புனித காபா, அந்த சதுர வடிவ சிறு கட்டடம்... பல அடுக்குமாடி நவீன கட்டடங்களை கண்டுகளித்த கண்கள் கூட, புனித காபாவை முதன் முதலில் காணும் போது உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே அதை வார்த்தையால் வடிக்க முடியாது.கண் தானாகவே நீரை சுரக்கிறது; உடல் நடுங்குகிறது; நெஞ்சு விம்முகிறது; நடை தளர்கிறது; பாதம் நகர மறுக்கிறது; ஓவென அழ தோன்றுகிறது; நா தழுதழுக்கிறது. இந்த பரவசத்தில். சக பயணிகள் என்னை மிதித்ததோ, உதைத்ததோ, தள்ளி விட்டதோ எதுவும் எனக்கு தெரியவில்லை. கம்பீரமான, அதே நேரத்தில் சாந்தமான தோற்றம், காண கண் கோடி வேண்டும். எத்தனை நபிமார்கள், எத்தனை சான்றோர்கள், எத்தனை நல்லடியார்கள் சுற்றி வந்த இடம். தொட்டு தழுவிய சுவர், இதழ் பதித்து முத்திய கல், அந்த பெருங்கூட்டத்தில் இதோ நானும் ஒருவன். பிறந்த பலனை அடைந்துவிட்டேன்; இனி, வேறொன்றும் வேண்டாம். இதே உணர்வில் கதறி அழுத ஹாஜிகள் பலரை நேரில் பார்க்க முடிந்தது. அந்த கட்டடத்தில் உள்ள கல்லுக்கும், மண்ணுக்கும் உள்ள சிறப்பா இது? அப்படியானால், மற்ற கட்டடங்களுக்கு இந்த சிறப்பு இல்லையே! ஸபா - மர்வா குன்றுகளுக்கிடையே நடக்கும் போதும், ஓடும் போதும் அன்னை ஹாஜர் முன்னே ஓடுகிறார். குழந்தை இஸ்மாயிலின் அழுகுரல் கேட்கிறது. ஸம்ஸம் நீரை பருகினால், வானவர் ஜிப்ரீல் தோண்டிய வற்றா ஊற்று காட்சியளிக்கிறது. அங்கே, கால் வலி மறந்து போகிறது. ஹாஜிகளுக்கு தான் எவ்வளவு பேறு! 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றோடு, அவர்கள் கரைந்து போகின்றனர்.
அரபா பெருவெளியில் லட்சம் தோழர்கள் நிற்க, அர்ரஹ்மத் மலை உச்சியில் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் உருக்கமான ஓர் உரை நிகழ்த்த, இன்று அதே இடத்தில் நான்; ஆகா...! என்ன அற்புதமான காட்சியப்பா அது! பயணக் களைப்பும், களிப்பாக மாறும் அதிசயம். மினாவில் ஷைத்தானுக்கு கல்லெறியும் போது ஏற்படும் உணர்ச்சி இருக்கிறதே, அனுபவித்தால் தான் உணர முடியும். இவ்வளவு காலம் நீ தானே என்னை கெடுத்துக் கொண்டிருந்தாய்; இன்றோடு நீ ஒழிந்து போ என்ற வேகம், ஒவ்வொரு கல்லை வீசும் போதும் எழுகிறது. மதீனாவில் தான் எத்தனை நினைவுகள். அந்த மாமனிதர் ஓய்வெடுக்கும் அத்தலத்தில், வர்ணிக்க இயலாத எண்ணங்கள், ஆசைகள். அப்படியே தடுப்பை தாண்டி, உள்ளே புகுந்து அண்ணலாரின் திருவதனத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை பார்த்துவிட மாட்டோமா? அப்படியே கொஞ்சம் அவர்களின் பூக்கரத்தை தொட்டு விட மாட்டோமா? மணக்கும் அந்த மேனியை கட்டி தழுவி விட மாட்டோமா? எத்தனை பேராசைகள்? நடக்காது என்று தெரிந்தும் உள்ளத்தின் துடிப்பு அப்படி! அண்ணலார் தொழ வைத்த இடம். உரை நிகழ்த்திய மேடை, அறிவுரை கூறிய இடம், ஆலோசனை நடத்திய இடம், விசாரணை செய்த இடம், தீர்ப்பு சொன்ன இடம், நபி தோழர்கள் தொழுத இடம், அழுத இடம், சிரித்த இடம், பாடம் படித்த இடம், வெளிநாட்டு துாதர்கள் வந்து போன இடம், திண்ணை தோழர்கள் பசியால் புரண்ட இடம்.
அருகிலேயே ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஜன்னத்துல் பகீ, பெருநாள் தொழுகைத்திடல், முஹாஜிர்கள் அன்சாரிகள் இடையே கைதேர்ந்த விவாதம் நடந்த பனுாசாயிதா மண்டபம். உஹுத் மலை. அங்கே ஹம்ஸா (ரலி) அவர்களின் அடைக்கலம். இப்படி பல்வேறு வரலாற்று சுவடுகள். நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலம்... இப்படி பல்வேறு வரலாற்றுச் சுவடுகள். நபி (ஸல்) அவர்களின் காலத்தை சொல்லும் நினைவுச் சின்னங்கள். எல்லாவற்றையும் கண்டு, ரசித்து, நினைத்து, அழுது, புலம்பி ஊர் திரும்புகையில் சொல்லில் செயலில் நிதானம், சாந்தம், விவேகம், சக மனிதர்கள் மீது பரிவு, பாசம், தெளிவு, இறை வழிபாட்டில் புத்துணர்வு, என, எல்லாம் கலந்த புது மனிதனாக திரும்புகிறார் ஹாஜி. ஹஜ் அவரது வாழ்க்கையில், திருப்புமுனை பல முனைகளில் இப்போது பயிற்சி பெற்றவர். நல்லவர், பாவங்கள் இல்லாத பால் வடியும் முகம் கொண்ட பாலகர். -கே.ஷகீல் அஹ்மத்