பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
நாமக்கல்: நல்லிபாளையம் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. நாமக்கல் அடுத்த, நல்லிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், துர்க்கை, மகாவிஷ்ணு, பிரம்மா, நவக்கிரக கோபுர பரிவார மூர்த்திகளுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த, 11ம் தேதி, இரவு கிராமசாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் நடந்தது. நேற்று முன்தினம், கோபுர கலசம் வைத்து கண் திறத்தல், 108 வகை மூலிகை ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை நடந்தது. காலை, 6:30 மணிக்கு விநாயகர், மாரியம்மன் கோபுரத்துக்கும், காலை, 7:00 மணிக்கு, விநாயகர், மாரியம்மன் பரிவார தெய்வங்களுக்கும், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.