பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
கோத்தகிரி : கோத்தகிரி இந்திராநகர் முத்து மாரியம்மன், முனீஸ்வரர் மற்றும் மாகாளியம்மன் கோவில்களில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, 12ம் தேதி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் லட்சுமி ஹோம பூஜையை அடுத்து, தீபாராதனை நடந்தது. மாலை வாஸ்து பூஜையுடன், காப்பு கட்டி முதல்கால யாக பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், காலை, எட்டு மணிக்கு, மங்கள இசை, திருமுறை பாராயணம், வேதபாராயணம், திரவிய யாகம், ஈசனுடன் இரண்டற கலந்த இறைவிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, கோபுர கலசங்கள், அதிவாச கிரியைகள், பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல், யாக வேள்வி நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து தீபாராதனை மங்கள இசை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, திருக்குடங்கள் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியை அடுத்து, அருள்மிகு முத்து மாரியம்மன், அருள்மிகு முனீஸ்வரர் மற்றும் அருள்மிகு மாகாளியம்மனுக்கு, கோவில் பூசாரி மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில், இந்திராநகர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். விழாவில், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.