பதிவு செய்த நாள்
16
செப்
2016
11:09
தஞ்சாவூர்: திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில் யானைக்கு, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில், ஷவர் பாத் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான, மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கோமதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை, 1972ல் சங்கரன் கோவிலில் இருந்து, கோவிலுக்கு வழங்கப்பட்டது.
14 கிலோ அரிசி: இந்த யானையின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன், மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக ஷெட், வெப்பத்தை தனிக்கும் பொருட்டு மின்விசிறிகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, தினசரி தென்னை மட்டை, அரச மர இலைகள், 14 கிலோ அரிசி சாதம் வழங்கப்படுகிறது.
ரூ.2 லட்சம்: மேலும், யானைக்கு நாள்தோறும் பயறு, கொள்ளு, கேழ்வரகு மற்றும் பயோ பூஸ்ட், அர்த்தசூர்னம், லிவர் 52 மாத்திரை, லேகியம், மீன் மாத்திரைகள் மற்றும் தேவையான நாட்டு மருந்துகள் கொடுக்கின்றனர். இந்நிலையில், யானை கோமதி குளிக்கும் வகையில், இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில், சாரல் மழை பெய்வது போன்று, எட்டு, ஷவர் பாத் அமைக்கப்பட்டு இரு வேளை குளிப்பாட்டி பராமரித்து வருகின்றனர். ஷவர் பாத்தில், யானையை குளிப்பாட்டும் போது, ஏராளமானோர் திரண்டு ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.