பதிவு செய்த நாள்
30
செப்
2011
10:09
திருவனந்தபுரம் : பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களைக் கொண்டுள்ள, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்க, கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகள், சமீபத்தில் திறக்கப்பட்டன. அப்போது, ரகசிய அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பொக்கிஷங்களை மதிப்பிட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்வதற்காக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டினார். இந்தக் கூட்டத்தில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் புவி அறிவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, ஏராளமான பொக்கிஷங்களைக் கொண்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதுகாப்புக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அச்சுறுத்தல் வரலாம் என்பது உட்பட, கோவிலின் பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், பத்மநாபசுவாமி கோவிலுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு ஒப்புதல் அளித்தது. அத்துடன், செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிக்கக் கூடிய கருவிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அலாரங்கள் பொருத்துவது, மெட்டல் டிடெக்டர்கள், எக்ஸ்ரே ஸ்கேனர்கள் மற்றும் ரகசிய கேமராக்கள் போன்றவற்றை கோவிலின் பல இடங்களில் பொருத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, 41 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ரகசிய அறைகளுக்கு நவீன பூட்டுக்கள் போடுவது மற்றும் ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாப்பாக எப்படிப்பட்ட பெட்டிகளில் வைப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.