பதிவு செய்த நாள்
21
செப்
2016
11:09
சென்னை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகமான பூம்புகார் சார்பில், கொலு பொம்மை கண்காட்சி, சென்னை, அண்ணா நகர் அடுத்த, முகப்பேர் மெயின் ரோடு, சின்னசாமி கல்யாண மண்டபத்தில், நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ராஜஸ்தான், கோல்கட்டா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், விருது பெற்ற கைவினைஞர்களால் உருவாக்கப் பட்ட களிமண், காகிதக்கூழ், பளிங்குத்துாள், மரம், கோல்கட்டா களிமண், சுடு களிமண் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
தசாவதாரம், அஷ்டலட்சுமி, விநாயகர், குபேரன், திருமலை, கோபியர் நடனம், தர்பார், கிரிக்கெட் விளையாட்டு, சங்கீத மும்மூர்த்திகள், வைகுண்டம், மாயா பஜார், கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட பொம்மைகள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும், 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வங்கி அட்டைகளும், எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். கண்காட்சியில், 10 ரூபாய் முதல், 1.20 லட்சம் ரூபாய் வரையிலான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. செப்., 24ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்கள் அறிய, 044 - 2852 0624, 98435 51048 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.