அன்னுார்: அன்னுாரில் ஆடிப்பூர விழாவில் பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அன்னுார், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 21ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா நடந்தது. அதிகாலையில் சக்தி கொடியேற்றப்பட்டது. கலச விளக்கு ஏற்றுதல், வேள்வி பூஜை நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தலையில் வைத்து மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு, மெயின்ரோடு, ஓதிமலை ரோடு, சத்தி ரோடு வழியாக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை அடைந்தனர். நீண்ட வரிசையில் நின்று தாங்களே கருவறையில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்கப்பட்டது. அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். சித்தர் பீட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.