சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளில் மாற்றம்: அக்.20ல் அஷ்டபந்தன கலசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2016 12:09
சபரிமலை: 12 ஆண்டுகளுக்கு பின்னர் சபரிமலையில் வரும் அக்.,20-ம் தேதி அஷ்டபந்தன கலசம் நடக்கிறது. இதையொட்டி ஐப்பசி மாத பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்கு தோஷ பரிகார பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலையில் புதிய தங்க கொடி மரம் அமைப்பது, அதற்கான முகூர்த்தம் நிச்சயிப்பது தொடர்பாக தாம்பூல பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் சில தோஷங்கள் இருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது சபரிமலையில் அந்த பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் மூன்று நேர பகவதி சேவையும், சன்னிதானத்தில் லட்சார்ச்சனையும் நடைபெற்றது. நேற்று சன்னிதானத்தில் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன கலசம் வரும் அக்.20-ம் தேதி நடைபெறும். இதற்காகவும், ஐப்பசி மாத பூஜைகளுக்காகவும் சேர்த்து அக்.,16 மாலை ஐந்து மணிக்கு திறக்கும். 18-ம் தேதி பிராசாத சுத்தி கிரியைகள் நடக்கும். 19-ம் தேதி பிம்ப சுத்திகிரியைகள் நடைபெறும். 20-ம் தேதி அதிகாலை 4.40 -க்கும் ஆறு மணிக்கும் இடையிலான முகூர்த்தத்தில் அஷ்டபந்தன கலசம் நடைபெறும். இதையொட்டி அக்.20,21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது. இதுபோல சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக அக்.,28 மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். 29 இரவு பத்து மணிக்கு நடை அடைக்கும். அன்றும் நெய்யபிஷேகம் கிடையாது. 29-ம் தேதி படி பூஜையும், உதயாஸ்மனபூஜையும் நடைபெறும்.