பதிவு செய்த நாள்
30
செப்
2016
12:09
புதுச்சேரி: மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு இன்று கோமாதா ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராஜா சாஸ்திரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: மகாளயபட்ச அமாவாசை முடிய உள்ள 15 நாட்களும் மகாளயபட்சம் புண்ணிய தினங்களாகும். இந்த 15 தினங்களும் நம்மீது அன்பும், பாசமும் காட்டி வளர்த்து, நமக்காக பல சுகங்களை தியாகம் செய்து மறைந்த, நம் முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டிய நாட்களாகும். முன்னோர் நமது வீடு தேடி வந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகளை ஏற்று ஆசீர்வதிக்கும் நாட்களாகும். மகாளயபட்ச ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள் பூமியை வந்தடைகின்றனர். அவர்கள் நம்மிடையே வந்து, நம்முடன் தங்கும் இந்த 15 நாட்களும் நமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் குடும்பத்தில் சண்டை போடுவது, அசைவம் உண்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தங்களது வீட்டில் பூஜை செய்வதை விட பசுக்கள் நிறைந்த இடத்தில் பூஜை செய்வது மிக அதிக பலன்களை தரும். மகாளயபட்ச அமாவாசை இன்று நிறைவு நாளாகும். ஆண் வாரிசு இல்லாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கணவருக்காக இன்றைய தினம், தர்ப்பணம், பிண்டதானம், கோ பூஜை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.