ஐப்பசி மாதம் 1ம் தேதி (அக்.17) திங்கள் கிழமை கோவத்ச துவாதசி ஆகும். இன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பசு, கன்றுகளுக்கு புல், அகத்திக்கீரை, பழம் கொடுத்து பூஜித்தால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
தன திரயோதசி!
ஐப்பசி மாதம் 12ம் தேதி (அக்.28) வெள்ளிக்கிழமை தனத் திரயோதசி ஆகும். அன்று தங்கநகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு. இதனால் பொருள், பணம் சேர்க்கை உண்டாகும். இந்நாளில் குபேரலட்சுமி மற்றும் தன்வந்திரியை வழிபட்டால் செல்வ வளத்துடன் ஆரோக்கியமாக வாழலாம்.
கந்த சுக்கிர வார விரதம்!
முருகனுக்குரிய கிழமைகள் செவ்வாய், வெள்ளி. இதில் வெள்ளியன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் செல்வவளம், வெற்றி, ஆரோக்கியம் கிடைக்கும். இதை கந்த சுக்கிர வார விரதம் என்பர். ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, ஒவ்வொரு வெள்ளியும் மூன்று ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நாட்களில் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.
கேதார கவுரி விரதம்!
ஐப்பசி மாதம் 14ம் தேதி (அக்.30) ஞாயிற்றுக்கிழமை கேதார கவுரி விரதம். சுமங்கலிகள் நோன்புக்கயிறு கட்டி, பலகாரங்கள் படைத்து பெருமாளை வழிபடுவர். இந்நாளில் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். துலா ஸ்நானம்!
ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் எனப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமியையும் தரிசனம் செய்ய வேண்டும். இதனால் எல்லா பாவங்களும் நீங்கும். புண்ணியம் கிடைக்கும்.
தீபாவளி!
ஐப்பசி மாதம் 13ம் தேதி (அக்.29) சனிக்கிழமை தீபாவளி ஆகும். ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தேய்பிறை சதுர்த்தசி திதியை நரக சதுர்த்தசி என்பர். இந்நாளே தீபாவளி திருநாள் ஆகும். இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை கொன்று மக்களை காத்தமைக்காக நன்றி தெரிவிக்கப்படுகிறது. அன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும், லட்சுமி குபேர பூஜையும் செய்தால், மகாலட்சுமி அருளால் செல்வ வளம் சிறக்கும்.