பதிவு செய்த நாள்
03
அக்
2016 
12:10
 
 கீழக்கரை: சேதுக்கரை கடலோரத்தில் உடைந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலை காணப்படுகிறது. திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் கிராமத்தில் உள்ள சதுப்புநிலக்காடுகளின் வழியாக வைகை நீர்வரத்துப்பகுதியான கொட்டகுடி ஆற்றின் முகத்துவாரத்தில் தலைமுதல் இடுப்பு வரை இல்லாத நிலையில் தீர்த்தங்கரர் சிலை ஒன்று நீரில் மூழ்கி கிடக்கிறது. தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் வே.ராஜகுரு கூறுகையில், கி.மு., 6ம் நுாற்றாண்டில் சமண சமயம் பெரியஅளவில் இருந்துள்ளது. திசையை ஆடையாக உடுத்தியவர்கள் திகம்பரர் (நிர்வாண நிலை) என்ற பிரிவினரும், ஆடை உடுத்தியவர்கள் நிகம்பரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். 24 தீர்த்தங்கரர்களில் முக்கியமானவர் மகாவீரர். சமண சமய கொள்கைகளில் கடல் கடந்து பயணம் செய்யக்கூடாது, என்ற மதக்கோட்பாடு உள்ளது. அதனால், சமணசமயம் இந்தியாவைவிட்டு எங்கும் செல்லவில்லை. கி.மு., 3ம் நுாற்றாண்டில் இருந்து கி.பி. 6 நுாற்றாண்டு வரை தமிழகத்தில் இம்மதம் தழைத்தோங்கியது. அதனால் தமிழ் வளர்ச்சி காரணமாக தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தில் அதிகமாக விளங்கியது.
அதிலிருந்து சமயம், பொருளாதாரம், வணிகம் என்ற அன்றைய சமகாலத்திய நிகழ்வுகளை அறிய முடிகிறது. பின்னர் 7ம் நுாற்றாண்டு காலத்தில் சமண சமய வளர்ச்சி குன்றத்தொடங்கியது. சோழர் காலத்தில் சமண சமயத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் அனுமந்தக்குடி என்ற ஊரில் வாழ்ந்த சமணர் பற்றிய குறிப்புகள் அனுமந்தக்குடி செப்பேட்டில் காணப்படுகிறது. பின்னாளில் வழிபாட்டில் இருந்து உடைந்த சிற்பங்களை நீர்நிலைகளில் கொண்டு இடுவது மரபாக உள்ளதால் அவ்வகையில் மேற்கண்ட சிற்பம் இப்பகுதியில் காணப்படுகிறது. சமண மற்றும் புத்தமத தடயங்களாக பெரியபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை மூலமாக ஒருசில சிற்பங்களும் செம்பு பொருள்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தென்பட்ட இரு சிலைகள் யோக, ஆசன நிலையில் உள்ளது. மேலும் சிறப்பதின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் அழிந்த நிலையில் பிராமி எழுத்துக்கள் தெளிவில்லாத நிலையில் உள்ளது. சேதமடைந்துள்ள கல் சிற்பங்களை கண்டெடுத்து அதனை தொல்லியல்துறை மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் பல அரிய செய்திகளை நாம் பெறலாம், என்றார். நேற்று முன்தினம் சமண சமயத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வுக்குழுவினர் இச்சிலையின், காலம், தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.