பதிவு செய்த நாள்
01
அக்
2011
12:10
பாரிஸ்டர் ஆவதற்காகவே நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். ஆனால், அதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது.
ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன் முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால், நான் சாப்பிடக் கூடியவை ரொட்டியும் வேக வைத்த உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே. இவையும் எனக்குப் பிடிப்பதில்லையாகையால் ஆரம்பத்தில் இவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. பின்னால் இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும், வேறு பண்டங்களும் வேண்டும் என்று கேட்கும் துணிச்சலும் எனக்கு உண்டாயிற்று.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட, நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும். என்னைப் போல ஒரு பார்ஸி மாணவரும் மாமிசம் சாப்பிடாதவர். நீதிபதிகளுக்குப் பறிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும் பரிமாற வேண்டும் என்று நாங்கள் இருவரும் மனுச் செய்து கொண்டோம். எங்கள் மனு அங்கீகரிக்கப் பெற்றது. நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும் மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.
நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்.
இத்தகைய விருந்துகள், பாரிஸ்டராவதற்கு மாணவர்களை எவ்விதம் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான் அப்பொழுதும் உணரவில்லை. அதற்குப் பின்னரும் உணரவில்லை. மிகச் சில மாணவரே இத்தகைய விருந்துகளில் கலந்து கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும் கலந்து பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன, பிரசங்கங்களும் நடந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களினால் அவர்களுக்கு உலக ஞானத்துடன், ஒருவகையான மெருகும் வளர்த்துக் கொள்ள முடியும். என் காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து மேஜைகள் போடப்பட்டிருந்ததால் அத்தகைய வாய்ப்பு என்றுமே எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள் இல்லாமலே போயிற்று. என்றாலும் பழைமையில் பற்றுக் கொண்ட இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.
பரீட்சைக்கு உரிய பாடங்கள் மிகச் சுலபமானவை. பாரிஸ்டர்களை, விருந்து பாரிஸ்டர்கள் என்றும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும் இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும். என் காலத்தில் ரோமன் சட்டப் பரீட்சை, பொதுச் சட்டப் பரீட்சை என்று இரு பரீட்சைகள் உண்டு. இவற்றிற்கு இன்னவை பாடப் புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை எழுதலாம். அப்பாடப் புத்தகங்களை யாரும் அநேகமாக படிப்பதே இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும் குறிப்புக்களை மாத்திரம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, ரோமன் சட்டப் பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன். அதே போலப் பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புகளை மாத்திரம் இரண்டு மூன்று மாதங்களில் படித்துவிட்டு, அப்பரீட்சையிலும் தேறி விடுவார்கள். கேள்விகள் சுலபமானவை, மாணவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மார்க் கொடுப்பவர்களும் தாராளமாக நடந்து கொண்டார்கள் ரோமன் சட்டப் பரீட்சைக்குச் செல்பவர்களில் 100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர். முடிவான பரீட்சையிலும் 100-க்கு 75 அல்லது அதற்கு அதிகமானவர்கள் கூடத் தேறி விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல் போய்விடுவோமோ என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறைகள் நடந்தன * இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும் நினைப்பதற்கில்லை.
ஆனால், நான் மாத்திரம் அவற்றைச் சிரமமானவையாகச் செய்துகொண்டு விட்டேன். பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவைகளைப் படிக்காமல் இருந்து விடுவது ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை வாங்குவதில் அதிகப் பணமும் செலவிட்டேன். ரோமன் சட்டத்தை லத்தீன் மொழியிலேயே படிப்பது என்று தீர்மானித்தேன். லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்காக நான் லத்தீன் படித்தது எனக்கு உதவியாக இருந்தது. நான் இவ்விதம் படித்ததெல்லாம் தென்னாப்பரிக்காவில் ரோமன் டச்சு பொதுச் சட்டமாக இருந்ததால் அந்நாட்டில் இருந்தபோது, எனக்கு நன்மையை அளித்தது, ஜஸ்டினியனைப் படித்தது, தென்னாப்பிரிக்காவின் சட்டங்களைப் புரிந்து கொள்ளுவதில் எனக்கு அதிக உதவியாக இருந்தது.
இங்கிலாந்தின் பொதுச் சட்டங்களை நான் கஷ்டப்பட்டுப் படித்து முடிக்க ஒன்பது மாத காலம் ஆயிற்று. புரூம் எபதிய பொதுச் சட்டம் என்ற நூல் பெரியதாயினும் சுவராஸ்யமானது அதைப் படித்து முடிக்க அதிகக் காலம் ஆகிவிட்டது. ஸ்னெல் எழுதிய ஈக்விடி என்ற நூல் சிறந்த விஷயங்களைக் கொண்டது. ஆனால், புரிந்து கொள்ளுவதுதான் சிரமம். ஓயிட்டும் டூடரும் எழுதிய, முக்கியமான வழக்குகள் என்ற நூலில் சில வழக்குகள் பாடங்கள். இவை கவர்ச்சியானவைகள் ஆகவும், விஷய ஞானத்தைப் போதிப்பவைகள் ஆகவும் இருந்தன. வில்லியமும் எட்வர்டும் எழுதிய உண்மையான சொத்து குடவேயின் சொந்தச் சொத்து ஆகிய நூல்களையும் படித்தேன். வில்லியத்தின் பத்தகத்தைப் படிப்பது கதை படிப்பது போல் இருந்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பியதும் அதேபோல், குறையாத சிரத்தையுடன் நான் படித்த ஒரே புத்தகம் மேய்னே எழுதிய ஹிந்துச் சட்டம் என்பதாக எனக்கு ஞாபகம். இந்தியச் சட்டப் புத்தகங்களைப் பற்றிச் சொல்ல இது இடமன்று.
பரீட்சைகளில் தேறினேன். 1891, ஜூன், 10-ஆம் தேதி என்னைப் பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்த்துக் கொண்டனர். ஜூன், 11-ஆம் தேதி, ஹைக்கோர்ட்டில் பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டேன். 12-ஆம் தேதி இந்தியாவுக்குக் கப்பல் ஏறினேன்.
நான் என்னதான் படித்திருந்தேனாயினும் எனக்குள் இருந்த பயத்திற்கும், சக்தியற்றிருக்கிறேன் என்ற உணர்ச்சிக்கும் முடிவே இல்லை. வக்கீல் தொழிலை நடத்துவதற்குத் தகுதி பெற்றுவிட்டதாக நான் உணரவே இல்லை. எனது இந்தச் சக்தியின்மையைப் பற்றி விவரிக்க ஒரு தனி அத்தியாயமே வேண்டும்.