பதிவு செய்த நாள்
01
அக்
2011
03:10
இங்கிலாந்திற்குப் புறப்பட்டபோது பிரிவாற்றாமையால் என்ன மனக்கஷ்டம் இருந்ததோ, அத்தகைய உணர்ச்சியெல்லாம் இப்பொழுது தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்ட போது இல்லை என் தாயாரோ காலமாகிவிட்டார். எனக்குக் கொஞ்சம் உலக அனுபவமும் ஏற்பட்டுவிட்டது. ராஜ் கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போவதும் இப்பொழுது மிகச் சாதாரணமாகவே இருந்தது.
இத்தடவை, மனைவியை விட்டுப் பிரிந்து போகிறோமே என்பதைப்பற்றி மாத்திரமே எனக்கு மனக்கஷ்டம் இருந்தது. நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர். எங்களுக்கு மற்றும் ஒரு குழந்தை பிறந்தது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு காமக் கலப்பு இல்லாதது என்று இன்னும் சொல்லிவிடுவதற்கு இல்லை. என்றாலும், அது நாளுக்கு நாள் தூய்மையாகி வந்தது. ஐரோப்பாவிலிருந்து நான் திரும்பி வந்த பிறகு, நாங்கள் இருவரும் சொற்பகாலமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். அவ்வளவு அதிக சிரத்தையுடன் இல்லை என்றாலும் நான் அப்பொழுது அவளுக்கு ஆசிரியன் ஆகியிருந்தேன். சில சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவளுக்கு உதவி செய்து வந்தேன். அந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அடைவதென்றால், நாங்கள் இருவரும் அதிகமாகக் சேர்ந்து வாழ்ந்து வரவேண்டியது அவசியம் என்பதை இருவருமே உணர்ந்தோம் ஆனால், தென்னாப்பிரிக்கா செல்வதில் ஏற்பட்ட கவர்ச்சி, பிரிந்து வாழ்வதையும் சகிக்கக் கூடியதாக்கியது. அவளுக்கு ஆறுதலாக இருப்பதற்காக நாம் எப்படியும் ஓர் ஆண்டில் மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டுப் பம்பாய் செல்ல ராஜ;கோட்டிலிருந்து புறப்பட்டேன்.
தாதா அப்துல்லா கம்பெனியின் காரியஸ்தர் மூலமாகவே கப்பல் டிக்கெட் கிடைக்க வேண்டியிருந்தது. ஆனால், கப்பலிலோ இடமில்லை. அப்பொழுது நான் கப்பல் ஏறவில்லையென்றால் பம்பாயிலேயே தங்கிவிட வேண்டிவரும். கப்பலில் முதல் வகுப்பில் இடம் பெறுவதற்காக எங்களால் ஆன முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்துவிட்டோம். பயனில்லை. மூன்றாம் வகுப்பில் போக நீங்கள் தயாராக இருந்தாலன்றி வேறு வழியில்லை. உங்கள் சாப்பாட்டுக்கு வேண்டுமானால் முதல் வகுப்பில் ஏற்பாடு செய்து விடலாம் என்றார், அக்காரியஸ்தர். நான் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்துவந்த காலம் அது. ஒரு பாரிஸ்டர் , மூன்றாம் வகுப்பில் எவ்விதம் பிரயாணம் செய்ய முடியும் ? ஆகவே, அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதை நான் நம்பவில்லை. காரியஸ்தரின் நேர்மையில் சந்தேகம் கொண்டேன். அவருடைய சம்மதத்தின் பேரில் கப்பலுக்கே போனேன். அதன் பிரதம அதிகாரியையும் கண்டு பேசினேன். அவர் உள்ளதைச் சொல்லிவிட்டார். வழக்கமாக எங்கள் கப்பலில் இப்படி இட நெருக்கடி ஏற்படுவதில்லை. ஆனால், மொஸாம்பிக் கவர்னர் ஜெனரல் அக்கப்பலில் வருகிறார். ஆகையால், இடத்தையெல்லாம் அமர்த்திக் கொண்டு விட்டனர் என்றார்.
என்னையும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட உங்களால் முடியாதா? என்று கேட்டேன். அவர் உச்சியிலிருந்து உள்ளங்கால்கரை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு புன்னகை புரிந்;தார். பிறகு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. என் அறையில் அதிகப்படியாக ஓர் இடம் இருக்கிறது. சாதாரணமாக அதைப் பிரயாணிகளுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், அதை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார், கப்பலின் பிரதம அதிகாரி. அவருக்கு நன்றி கூறிவிட்டு, அதற்கு வேண்டிய டிக்கெட்டைக் காரியஸ்தரைக் கொண்டு வாங்கச் செய்தேன். ஆகவே, தென்னாப்ரிக்காவில் என்னுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதென்ற முழு உற்சாகத்துடன் 1893, ஏப்ரலில் புறப்பட்டேன்.
எங்கள் கப்பல் அடைந்த முதல் துறைமுகம் லாமு என்பது. சுமார் பதின்மூன்று நாட்களில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இதற்குள் கப்பல் காப்டனும் நானும் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டோம். சதுரங்கம் ஆடுவதில் அவருக்கு அதிகப் பிரியம். ஆனால் , அந்த ஆட்டம் அவருக்கு புதியது. ஆகையால், தம்மிலும் அதிகக் கற்றுக் குட்டியாக இருப்பவரையே தம்முடன் விளையாடுவதற்குச் சகாவாக அவர் விரும்பினார். எனவே சதுரங்கம் ஆட என்னை அழைத்தார். அவ்விளையாட்டைக் குறித்து எவ்வளவோ கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், நான் விளையாடியது மாத்திரம் இல்லை. அதை விளையாடினால் அறிவுக்கு அதிகப் பயிற்சி உண்டு என்று விளையாடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். அதில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க காப்டன் முன் வந்தார். அவருக்கு எல்லையற்ற பொறுமை உண்டு. ஆகையால், நான் நல்ல மாணவன் எனக்கண்டார். ஒவ்வொரு சமயமும் தோற்பவன் நானே. இது எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு இன்னும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியது. சதுரங்கம் விளையாடுவது, எனக்கும் பிடித்திருந்தது. ஆனால், அவ்விருப்பத்தை அக்கப்பலோடு விட்டுவிட்டேன். அந்த ஆட்டத்தைப்பற்றி எனக்கு இருந்த ஞானம், காய்களை நகர்த்தி வைப்பதற்கு மேலே போனதே இல்லை.
லாமுவில் கப்பல் மூன்று, நான்கு மணிநேரம் நின்றது. துறைமுகத்தைப் பார்ப்பதற்காக இறங்கினேன். காப்டனும் இறங்கிப் போனார். ஆனால், அத்துறைமுகம் அபாயகரமானது என்றும், முன்னாலேயே திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார். லாமு மிகச் சிறிய ஊர், துறைமுகக் காரியாலயததிற்குச் சென்றேன். அங்கே இந்திய குமாஸ்தர்கள் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுடன் பேசினேன். ஆப்பிரிக்காக்காரர்களையும் அங்கே பார்த்தேன். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுவதில் எனக்கு அதிகச் சிரத்தை உண்டாயிற்று, அதை அறிந்து கொள்ளவும் முயன்றேன். இதில் கொஞ்சம் நேரமாயிற்று.
அக்கப்பலின் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளில் சிலருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தரைக்குப் போய்ச் சமைத்து அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காக அவர்களும் இறங்கியிருந்தனர். அவர்கள் கப்பலுக்குத் திரும்பிவிடத் தயாராக இருந்ததைக் கண்டது எல்லோரும் ஒரே படகில் ஏறிப் புறப்பட்டோம். துறைமுகத்தில் அலை, பலமாக இருந்தது. படகிலோ இருக்க வேண்டியதற்கு அதிகமான பளு இருந்தது. அலைகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்ததால், கப்பலின் ஏணிக்கு அருகில் படகை நிறுத்துவது என்பது முடியாததாகிவிட்டது. படகு ஏணியைத் தொடும், உடனே ஒரு பலமான அலை வந்து, படகை தூரத்திற்குக் கொண்டு போய்விடும். கப்பல் புறப்படுவதற்கு, முதல் சங்கும் ஊதியாயிற்று. நான் அதிகச் சஞ்சலம் அடைந்து விட்டேன் காப்டன் எங்களுடைய தவிப்பையெல்லாம், மேல்தளத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல், மேற்கொண்டும், ஐந்து நிமிட நேரம் காத்திருக்க உத்தரவிட்டார். கப்பலுக்கு அருகே மற்றொரு படகு இருந்தது. அதை எனக்காக ஒரு நண்பர், பத்து ரூபாய்க்கு அமர்த்தினார். அதிகப் பளு ஏற்றப்பட்டிருந்த படகிலிருந்து என்னை இப்படகு ஏற்றிக்கொண்டது. ஏணியையோ இதற்குள் உயர்த்தி விட்டார்கள். ஆகையால் என்னைக் கயிறு கொண்டு மேலே தூக்கினார்கள். உடனே கப்பலும் கிளம்பிவிட்டது. மற்ற பிரயாணிகள் ஏற முடியவில்லை. காப்டன் செய்த எச்சரிக்கை, அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.
லாமுக்கு அடுத்த துறைமுகம், மொம்பாஸா. அதன் பிறகு ஜான்ஸிபார் போய்ச் சேர்ந்தோம். அங்கே அதிக காலம் - எட்டு அல்லது பத்து நாள் வரை - தங்கினோம். பிறகு மற்றொரு கப்பலில் ஏறினோம். கப்பல் காப்டன் என்னிடம் அதிகப்பிரியம் கொண்டு விட்டார், ஆனால், அந்தப் பிரியம் விபரீதமான முடிவில் கொண்டு போய்விட்டது. உல்லாசமாகப் போய் வரலாம் என்று என்னையும் ஓர் ஆங்கில நண்பரையும் அவர் அழைத்தார். அவருடைய படகிலேயே நாங்கள் கரைக்குப் போனோம். உல்லாசமாகப் போய் வரலாம் என்றால் இன்னது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இத்தகைய விஷயங்களில் நான் எவ்வளவு அனுபவம் இல்லாதவன் என்பதும் காப்டனுக்குத் தெரியாது. ஒரு தரகன் எங்களை நீக்கிரோப் பெண்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒர் அறையைக் காட்டி, உள்ளே போகச் சொன்னான். நான் உள்ளே போனதும் வெட்கத்தால் வாய் பேசாமல் அப்படியே நின்றேன். என்னைப் பற்றி அப்பெண் என்ன நினைத்திருப்பாள் என்பது ஆண்டவனுக்கே தெரியும். காப்டன் அழைத்ததும் நான் போனபடியே வெளியே வந்துவிட்டேன். ஒரு பாவமும் செய்யாத என் நிலையை அவர் தெரிந்து கொண்டார். எனக்கு முதலில் அவமானமாக இருந்தது. ஆனால் அக்காரியத்தை நினைப்பதும் எனக்குப் பயமாக இருந்ததால் அவமான உணர்ச்சி மறைந்தது. அப்பெண்ணைப் பார்த்ததும் என் புத்தி தடுமாறிவிடாமல் இருந்ததைக் குறித்து கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த பலவீனத்திற்காக என்னை நானே வெறுத்தேன். அறைக்குள் போக மறுத்துவிடும் துணிச்சல் எனக்கு இல்லாது போனதைக் குறித்து எனக்கு நானே பரிதாப்பட்டுக் கொண்டேன்.
என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இது போன்ற சோதனைகளில் இது மூன்றாவதாகும். இளைஞர்களில் பலர் ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர். இதில் தவறிவிடாமல் வெளிவந்து விட்டதற்கு நான் பெருமைப்பட்டுக்கொள்ளக் காரணம் எதுவுமே இல்லை. அறைக்குள் போக நான் மறுத்திருந்தால் அது எனக்குப் பெருமையாக இருந்திருக்கும் என்னைக் காத்தருளியதற்கு கருணைக் கடலான ஆண்டவனுக்கே நான் நன்றி செலுத்த வேண்டும். இச்சம்பவம் கடவுள் மீதுள்ள என் நம்பிக்கையை அதிகமாக்கியது. அவமானம் என்ற தவறான உணர்ச்சியை ஓரளவுக்கு விட்டொழிக்கவும் இச் சம்பவம் எனக்குப் போதித்தது.
இத்துறைமுகத்தில் நாங்கள் ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் பட்டணத்தில் வசிக்க ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். சுற்றுப்புறங்களையெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தேன். ஜான்ஸி பார் செடி கொடிகள் நிறைந்து, இயற்கை வளத்தில், மலையாளத்தைப் போல் இருந்தது எனலாம். பிரமாண்டமான மரங்களையும், மிகப் பெரிய பழங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன். எங்கள் கப்பல் நின்ற அடுத்த துறைமுகம் மொஸாம்பிக். பிறகு மே மாதக் கடைசியில் நேட்டால் போய்ச் சேர்ந்தோம்.