பதிவு செய்த நாள்
01
அக்
2011
03:10
நேட்டாலின் துறைமுகம், டர்பன். அதை நேட்டால் துறைமுகம் என்பதும் உண்டு. என்னை வரவேற்க அப்துல்லா சேத் துறைமுகத்திற்கு வந்திருந்தார். கப்பல் கரையைத் தொட்டது நண்பர்களை வரவேற்கப் பலர் கப்பலுக்கு வருவதைப் பார்த்தேன். அப்படி வருகிறவர்களில் இந்தியர்களுக்கு மரியாதை காட்டப்படுவதில்லை என்பதையும் கவனித்தேன். அப்துல்லா சேத்தை அறிந்தவர்கள் அவரிடம் ஒரு வகையான அகம்பாவத்துடன் நடந்து கொள்ளுவதையும் நான் கவனிக்காது போகவில்லை. அது என் மனத்தை வருத்தியது. ஆனால், அப்துல்லா சேத்துக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது. என்னைப் பார்த்தவர்களும் அது போலவே ஏதோ விசித்திரப் பொருளைப் பார்ப்பது போலப் பார்த்தனர். நான் அணிந்திருந்த உடை, மற்ற இந்தியரிலிருந்து என்னை வேறுபடுத்திக்காட்டியது நான் வங்காளிகள் வைத்துக் கொள்வதைப் போன்ற ஒரு தலைப்பாகையை வைத்துக்கொண்டு, மேலங்கியும் அணிந்திருந்தேன்.
என்னைக் கம்பெனியின் கட்டடத்திற்கு அப்துல்லா சேத் அழைத்துச் சென்றார். அவருடைய அறைக்குப் பக்கத்து அறையில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர் என்னை அறிந்து கொள்ளவில்லை. என்னாலும் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. என் வசம் அவருடைய சகோதரர் அனுப்பியிருந்த காகிதங்களைப் படித்துவிட்டு, அவர் இன்னும் அதிகக் குழப்பமடைந்தார் யானையைக் கட்டித் தீனி போடச் சொல்லுவது போல என்னைத் தம்முடைய சகோதரர் அனுப்பியிருக்கிறார் என்றே எண்ணினார். என்னுடைய உடையின் கோலத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்துவிட்டு, ஐரோப்பியர்களைப் போல் எனக்கும் அதிகச் செலவாகும் என்று நினைத்தவிட்டார். குறிப்பாக எனக்குக் கொடுக்கக்கூடிய வேலையும் அப்பொழுது எதுவும் இல்லை. அவர்கள் வழக்கோ டிரான்ஸ்வாலில் நடந்து கொண்டிருந்தது. என்னை உடனே அங்கே அனுப்புவது என்பதிலும் அர்த்தமில்லை. என்னுடைய திறமையும் யோக்கியப் பொறுப்பையும் அவர் எந்த அளவுக்கு நம்ப முடியும் ? என்னைக் கண்காணிப்பதற்கு அவர் பிரிட்டோரியாவில் இருந்து வர இயலாது. பிரதிவாதிகள் பிரிட்டோரியாவில் இருக்கின்றனர். அவர்கள் என்னை எந்த வழியிலாவது வசப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று அவர் கருதினார். சம்பந்தப்பட்ட வழக்கைப் பற்றி வேலையை ஒப்படைப்பதற்கில்லை என்றால், வேறு எந்த வேலையை ஒப்படைப்பது ? வேறு வேலைகளெல்லாம், அவருடைய குமாஸ்தாக்களே என்னைவிட.. . நன்றாகச் செய்துவிட முடியும். மேலும் தவறு செய்யும் குமாஸ்தாக்களைக் கண்டிக்க முடியுமா ? ஆகையால் வழக்குச் முடியவில்லையென்றால், ஒரு பயனும் இல்லாமல் என்னை வைத்துக் கொண்டிருக்க நேரும்.
அப்துல்லா சேத், எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றே சொல்லலாம். ஆனால் மிகுந்த அனுபவ ஞானம் உள்ளவர். அதிக கூர்மையான அறிவு படைத்தவர். தமக்கு புத்திசாலித்தனம் அதிகம் உண்டு என்பதை அவரும் உணர்ந்திருந்தார். பழக்கத்தினால் அதைக் கொண்டு அவர், பாங்க் மானேஜர்களிடமோ, ஐரோப்பிய வர்த்தகர்களிடமோ பேசியும், தமது வழக்குச் சம்பந்தமாக வக்கீல்களிடம் தமது கட்சியை விளக்கியும் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இந்தியர்களுக்கு அவரிடம் உயர்ந்த மதிப்பு உண்டு. அச்சமயம் இந்தியரின் வியாபார ஸ்தலங்களில் அவருடைய கம்பெனியே மிகப் பெரியது, அல்லது பெரியவைகளில் ஒன்று என்றாவது சொல்ல வேண்டும். இவ்வளவு சாதகமான வசதிகளெல்லாம் இருந்தும், அவருக்குப் பிரதிகூலமானதும் ஒன்று உண்டு. அது, அவர் சுபாவத்திலேயே சந்தேகப் பிராணியாக இருந்ததுதான்.
இஸ்லாம் மதத்தின் சிறப்பில் அவர் பெருமைகொள்ளுபவர் அம்மதத்தின் தத்துவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலும் அவருக்குப் பிரியம் அதிகம். அவருக்கு அரபு மொழி தெரியாது. என்றாலும் பொதுவாகத் திருக் குர் ஆனிலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் அவருக்கு ஓரளவு நல்ல ஞானம் உண்டு. அவைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களை உடனுக்கு உடன் கூறுவார். அவருடன் பழகியதால் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, சமய விஷயங்களைக் குறித்து நீண்ட நேரம் விவாதித்தும் வந்தோம்.
நான் நேட்டாலுக்கு வந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ, என்னை டர்பன் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே என்னைப் பலருக்கு அறிமுகம் செய்து வைத்துத் தம் வக்கீலுக்குப் பக்கத்தில் என்னை உட்கார வைத்தார் மாஜிஸ்டிரேட்டோ, என்னை வெறிக்கப் பார்த்துக்கொண்டே இருந்தார். கடைசியாக, என் தலைப்பாகையை எடுக்கும்படி கூறினார். நான் எடுக்க மறுத்து, கோர்ட்டிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆகவே, இங்கும் எனக்கு போராட்டம் காத்துக் கொண்டிருந்தது. இந்தியர்களில் சிலர் மட்டும் தங்கள் தலைப்பாகையை எடுத்துவிட வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகின்றனர் என்பதை அப்துல்லா சேத் எனக்கு விளக்கிச் சொன்னார். முஸ்லிம் உடை தரிப்பவர்கள் மாத்திரம் தலைப்பாகைகளை வைத்துக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் தலைப்பாகையை எடுத்துவிடுவது வழக்கமாக நடந்து வருகிறது என்றும் சொன்னார்.
இந்த நுட்பமான பாகுபாடு புரியும்படி செய்வதற்குச் சில விவரங்களை நான் கூற வேண்டிருக்கிறது. அங்கிருந்த இந்தியர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இரண்டு மூன்று நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒரு பிரிவு முஸ்லிம் வர்த்தகர்களை கொண்டது. அவர்கள் தங்களை அராபியர் என்று சொல்லிக் கொண்டனர். மற்றொரு பிரிவினர், ஹிந்து குமாஸ்தாக்கள். பார்ஸி குமாஸ்தாக்களின் பிரிவும் இருந்தது. ஹிந்து குமாஸ்தாக்கள் அராபியருடன் சேர்ந்து கொண்டாலன்றி, இங்குமில்லை, அங்குமில்லை என்பதே அவர்கள் கதியாக இருந்தது பார்ஸி குமாஸ்தாக்களோ, தங்களைப் பாரஸீகர்கள் என்று சொல்லிக் கெண்டனர். இந்த மூன்று பிரிவினருக்குள்ளும் சில சமூக உறவுகள் இருந்தன. இவர்களைத் தவிர பெரிய பிரிவினராக இருந்தவர்கள் ஒப்பந்த தொழிலாளலர்களாகவும், சுயேச்சையான தொழிலாளராகவும் இருந்த தமிழரும், தெலுங்கரும், வட இந்தியரும் ஆவர். ஐந்து ஆண்டுகள் வேலை செய்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் நேட்டாலுக்குச் சென்றவர்களே ஒப்பந்தத் தொழலாளிகள். "கிரிமிதியர்" என்று இவர்கள் சொல்லப்படுகின்றனர். "
எக்ரிமென்ட்" என்ற ஆங்கிலச் சொல் "கிரிமித்" என்று திரிந்து, அதிலிருந்து "கிரிமிதியர்" என்று ஆகியிருக்கிறது. இந்தியர்களுக்குள் இருக்கும் மற்ற மூன்று பிரிவினருக்கும், இவர்களிடம் வர்த்தகத் தொடர்பைத் தவிர வேறு எந்தவிதமான தொடர்பும் இல்லை. பெரும்பான்மையான இந்தியர்கள், தொழிலாளர்கள் வகுப்பையே சேர்ந்தவர்கள். ஆகையால், ஆங்கிலேயர்கள் அவர்களைக் "கூலிகள்" என்றே அழைத்து வந்தனர். எல்லா இந்தியர்களுமே "கூலிகள்" அல்லது "சாமிகள்" என்று அழைக்கப்பட்டனர். "சாமி" என்பது தமிழர்களின் பெயர்கள் பலவற்றிற்கு விகுதியாக இருப்பது "ஸ்வாமி" என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபே "சாமி". அச்சொல்லின் பொருள் "எஜமான்" என்பதே. ஆகையால், தம்மை ஓர் ஆங்கிலேயர் "சாமி" என்று கூப்பிடும் போது இந்தியர் யாருக்காவது ஆத்திரம் உண்டானால் அவருக்குப் புத்திசாலித்தனமும் இருந்தால், இவ்வாறு ஒரு பதிலைச் சொல்லி வாயடைத்து விடுவார், என்னை "சாமி" என்று நீர் கூப்பிடலாம். ஆனால் "சாமி" என்பதற்கு "எஜமான்" என்பது பொருள். நான் உம் எஜமான் அல்லவே. என்பார். இதைக் கேட்டுச் சில ஆங்கிலேயர்கள் வெட்கிப்போவார்கள். மற்றும் சிலரோ, கோபமடைந்து திட்டுவார்கள், சமயம் நேர்ந்தால் அடித்தும் விடுவர். ஏனெனில் "சாமி" என்ற சொல், இழிவுபடுத்தும் சொல்லைத் தவிர அவர்களைப் பொறுத்தவரை வேறு எதுவும் இல்லை. அச்சொல்லுக்கு "எஜமான்" என்ற பொருளைக் கூறுவது, அவர்களைப் அவமதிப்பதற்குச் சமம்.
ஆகவே, என்னைக் கூலி பாரிஸ்டர் என்றே அழைத்தார்கள். வர்த்தகர்களும், "கூலி வர்த்தகர்கள்" என்றே அழைக்கப்பட்டனர். இவ்விதம், கூலி என்ற சொல்லுக்கு உரிய உண்மைப் பொருள் மறைந்துபோய் அது எல்லா இந்தியருக்கும் ஓர் அடைமொழி ஆகிவிட்டது. இவ்விதம் அழைக்கப்படுவதைக்கேட்டு, முஸ்லிம் வர்த்தகர் ஆத்திரம் அடைவார். "நான் கூலியல்ல, அராபியன் என்பார். அல்லது நான் ஒரு வியாபாரி என்பார் ஆங்கிலேயர் மரியாதை தெரிந்தவராக இருந்தால், தாம் தவறாக அழைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவார்.
தலைப்பாகை வைத்துக் கொள்ளும் விஷயம் இந்த நிலைமையில் மிக முக்கியமான ஒன்றாக ஆயிற்று. பிறர் உத்தரவிடுகிறார்கள் என்பதற்காக ஒருவர், தமது இந்தியத் தலைப்பாகையைக் கழற்றிவிடுவது என்பது அவமதிப்புக்கு உடன் படுவதாக ஆகும். ஆகவே, இந்தியத் தலைப்பாகையை அணிவதை அடியோடு விட்டுவிட்டு, ஆங்கிலத் தொப்பி போட்டுக்கொள்ளுவதே மேல் என்று நினைத்தேன். அப்படிச் செய்துவிட்டால் அவமதிப்பிலிருந்தும், விரும்பத்தகாத விவாதங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கருதினேன். ஆனால், இக்கருத்தை அப்துல்லா சேத் ஒப்புக்கொள்ள வில்லை. நீங்கள் அவ்விதம் ஏதாவது செய்வீர்களானால் அதனால் பெருந்தீங்கே விளையும். இந்தியத் தலைப்பாகையை அணிந்தே தீருவோம் என்று வற்புறுத்தி வருபவர்களை நீங்கள் கைவிட்டவர்களும் ஆவீர்கள். மேலும், இந்தியத் தலைப்பாகையே உங்கள் தலைக்கு அழகாகவும் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத் தொப்பி அணிந்து கொண்டால், உங்களை ஒரு ஹோட்டல் வேலைக்காரன் என்றே நினைத்து விடுவார்கள், என்று அவர் சொன்னார்.
அவர் கூறிய இப்புத்திமதியில் அனுபவ ஞானமும், தேசாபி மானமும் அடங்கியிருந்ததோடு, ஒரு சிறிய குறுகிய புத்திப் போக்கும் கலந்திருந்தது. அனுபவ ஞானம் இருந்தது தெளிவாகத் தெரிந்த விசயம். தேசாபிமானம் இல்லாதிருந்தால், அவர் இந்தியத் தலைப்பாகை அணிவதை வற்புறுத்தியிருக்க மாட்டார். ஹோட்டல் வேலைக்காரனைக் கேவலப்படுத்தி அவர் கூறியது. ஒரு வகையான குறுகிய புத்திப் போக்கையே வெளிப்படுத்தியது. ஒப்பந்த வேலையாட்களாக வந்த இந்தியரில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று வகுப்பார் இருக்கின்றனர். இதில் கிறிஸ்தவர்கள் என்போர், கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்ட ஒப்பந்தத் தொழிலாளரின் சந்தததியினர். 1893-இல் கூட இவர்கள் தொகை அதிகமாகவே இருந்தது. இவர்கள், ஆங்கில உடைகளையே அணிந்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஹோட்டல் ஊழியர்களாக வேலை செய்து பிழைத்து வந்தனர். ஆங்கிலத் தொப்பியைக் குறித்து அப்துல்லா சேத் குறை கூறியது, இந்த வகுப்பினரை மனத்திற்கொண்டேயாகும். ஹோட்டலில் பணியாளராக இருப்பது, இழிவான தொழில் என்று கருதப்பட்டது. இன்றும்கூட அநேகரிடம் இந்த எண்ணம் இருந்து வருகிறது.
மொத்தத்தில் அப்துல்லா சேத்தின் புத்திமதி எனக்குப் பிடித்திருந்தது. தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு எழுதினேன். கோர்ட்டில் நான் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயமே என்று வாதாடினேன். இவ்விஷயத்தைக் குறித்து பத்திரிகைகளில் பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிகைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன. இவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவும் வந்த சில தினங்களுக்குள்ளேயே இச்சம்பவம் எனக்கு எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது. சிலர் என்னை ஆதரித்தனர், மற்றும் சிலரோ, இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசி வரையில், என் தலைப்பாகை என்னிடம் இருந்தது. தென்னாப்பிரிக்காவில் நான் எப்பொழுது, ஏன், தலையில் எதையுமே அணிவதை விட்டேன் என்பதைக் குறித்துப் பிறகு கவனிப்போம்.