கடில் என்றால் மத்தியில் எனப்பொருள். நந்தினி நதி ஓரிடத்தில் இரண்டாகப் பிரிந்து ஓடும். அதன் நடுவில் அமைந்துள்ள மேடான பகுதியில்தான் துர்கை அன்னை, வண்டாக மாறி அருணாசுரனை சம்ஹரித்தாளாம். இந்தக் கோயிலின் விசேஷம் யட்ச கானம். அது என்ன யட்ச கானம்? பாட்டு, நடனம், வசனம், நூதன ஆடை, வித்தியாசமான அலங்காரங்களுடன் நடத்தப்படும் நாட்டுப்புற நாட்டிய சங்கீத நாடகம்தான் யட்ச கானம். இந்தக் கோயிலுக்கென்றே தனி யட்ச கானக் குழுக்கள் உண்டு. துர்கையிடம், தம் வேண்டுதலைக் கூறி நிறைவேறினால் யட்ச கானம் ஏற்பாடு செய்கிறேன் என வேண்டிக் கொள்வர். வேண்டுதல் நிறைவேறியதும், கோயிலில் குறிப்பிட்ட தொகையைக் கட்டினால், கோயில் மண்டபத்திலோ, அல்லது உங்கள் ஊரிலோ வந்து நடத்திச் செல்வர். துர்கையின் விளையாடல்கள் மற்றும் புராணக் கதைகள் மேடையில் இந்தக் குழு நடத்திக் காட்டும்!