குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசுரன் வதம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2016 11:10
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தசரா விழா அக்.,1 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் மாலை முதல் காளி வேடம் பூண்ட ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டியுடன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர்.இரவு 11:00 மணிக்கு அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின் 12:25 மணிக்கு சூரன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அம்மன் கடற்கரையில் 12:35 க்கு வந்தார். அம்மனிடம் இருந்து புறப்பட்ட வேலால் மகிஷாசுரனின் தலை கொய்யப்பட்டது. கடற்கரையில் இருந்த சிதம்பரேஸ்வரர் கோயில் மண்டபத்தில் 2:00 மணிக்கு எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. 3:00 மணிக்கு பின் தேரில் அம்மன் வலம் வந்து கோயில் சேர்ந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. மாலை 5:00 மணிக்கு கோயில் சேர்ந்தார்.மாலை 6:00 மணிக்கு காப்பு களைதல் நடந்தது. பக்தர்கள் விரதத்தினை நிறைவு செய்தனர். இரவு 12:00 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.