பதிவு செய்த நாள்
19
அக்
2016 
12:10
 
 கோவை : தீபாவளியை முன்னிட்டு, காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (தெற்கு மண்டலம்) கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ரயில்வேயும், ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து, பாரத சுற்றுலா ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு, காசி, கங்கையில் ஸ்நானம் செய்ய வசதியாக, சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில், வரும், 25ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக கயா செல்கிறது. கயாவில், முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தவும், தீபாவளியன்று கங்கையில் புனித நீராடி, காசி விஸ்வநாதரை தரிசிக்கவும், தொடர்ந்து திருவேணி சங்கமத்தில் நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லி, ஆக்ரா, தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கலாம்.
மொத்தம், 12 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு, சிலீப்பர் வசதிக்கு 10,035 ரூபாய், ஏசி வசதிக்கு, 13,940 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை கட்டணத்தில் அடங்கும். பயணிகளுக்கு சேவை புரிய, ஒவ்வொரு கோச்சுக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், கோச் கிளீனர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவுக்கு, 90031 40655 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, www.irctctourism.com இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.