பதிவு செய்த நாள்
03
அக்
2011
03:10
கல்கத்தாவிலிருந்து ராஜ்கோட்டுக்கு என் பிரயாணம் வழியில் காசி, ஆக்ரா, ஜெய்ப்பூர், பாலன்பூர் ஆகிய ஊருகளில் தங்குவது என்று திட்டமிட்டேன். இவைகளைத் தவிர அதிக ஊர்களைப் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒருநாள் தங்கினேன். பாலன்பூர் தவிர மற்ற ஊர்களில் சாதாரண யாத்திரிகர்களைப்போல் தரும சத்திரங்களிலோ, பண்டாக்கள் வீடுகளிலோ இருந்தேன். இந்த யாத்திரையில் ரெயில் கட்டணம் உள்பட ரூ 31க்கு அதிகமாக நான் செலவு செய்யவில்லை என்பதே எனக்கு ஞாபகம். ரெயிலில் சாதாரண வண்டிகளை விட மெயில் வண்டிகளில் கூட்டம் அதிகம், கட்டணமும் அதிகம் என்பதை அறிவேன். அதனால், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் மெயில் ரெயில்களை விடச் சாதாரண ரெயிலிலேயே நான் பிரயாணம் செய்தேன்.
மூன்றாம் வகுப்பு வண்டிகள் இப்பொழுது எவ்வளவு அசுத்தமாக இருக்கின்றனவோ அவ்வளவு அசுத்தமாகவே அப்பொழுதும் இருந்தன. கக்கூசுகளும் இப்போதிருப்பதைப் போலவே அப்பொழுதும் அசுத்தமாக இருந்தன. இப்பொழுது ஏதோ கொஞ்சம் அபிவிருத்தி இருக்கக்கூடும். ஆனால், முதல் வகுப்புப் பிரயாணிக்கு அளிக்கப்படும் வசதிக்கும் மூன்றாம் வகுப்பு பிரயாணிக்கு அளிக்கப்படும் வசதிக்கும் உள்ள வித்தியாசம் இவ்விரு வகுப்புகளின் கட்டணங்களுக்கும் உள்ள வித்தியாசத்திற்குச் கொஞ்சமும் பொருத்தம் இல்லாததாக இருக்கிறது. முதல் வகுப்புக்கும் மூன்றாவது வகுப்புக்கும் இங்கே இருப்பதைப் போன்ற பேதத்தை நான் அங்கே காணவில்லை. தென்னாப்பிரிக்காவில் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் அநேகமாக நீக்ரோக்களே. ஆயினும், இங்கே இருப்பதை விட அங்கே மூன்றாம் வகுப்பு வசதிகள் நன்றாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் சிலபகுதிகளில் மூன்றாம் வகுப்பு வண்டிகளில், பிரயாணிகள் தூங்குவதற்குரிய இட வசதியும், மெத்தை தைத்த ஆசனங்களும் உண்டு. கூட்டம் அதிகமாகி, இடநெருக்கடி ஏற்பட்டுவிடாத படியும் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கேயோ, மூன்றாம் வகுப்பு வண்டிகளில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாகப் பிரயாணம் செய்வதே வழக்கமாக இருந்து வருகிறது.
மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் சௌகரியங்களைக் கவனிப்பதில் ரெயில்வே அதிகாரிகளுக்கு இருந்துவரும் அசிரத்தை ஒரு புறம். மற்றொரு புறத்தில் பிரயாணிகளின் ஆபாசமான, யோசனையில்லாத பழக்கங்கள். இந்த இரண்டும் சேர்ந்து, சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒருவருக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதை ஒரு சோதனையாக்கி விடுகின்றன. கூட இருக்கும் பிரயாணிகளின் சௌகரியம், சுகம் ஆகியவைகளைக் குறித்துக் கொஞ்சமேனும் கவனிக்காமல், வண்டிக்குள்ளேயே கண்டபடி எல்லாம் குப்பையைப் போடுவது, நினைத்தபோதெல்லாம் நினைத்த இடத்திலெல்லாம் சுருட்டுப் பிடிப்பது, வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டு வண்டி முழுவதையும் எச்சில் படிகமாக்கிவிடுவது, கூச்சல் போட்டுப் பேசுவது, கத்துவது, ஆபாசமாகப் பேசுவது போன்றவை பிரயாணிகளிடம் பொதுவாக இருக்கும் பழக்கங்களாகும். 1902இல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தேன். 1915 முதல் 1919 வரையில் இடைவிடாமல் மூன்றாம் வகுப்பில் சுற்றுப்பிரயாணம் செய்தேன். இந்த இரு தடவைகளிலும், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் எந்த விதமான வித்தியாசத்தையும் நான் காணவில்லை.
பயங்கரமான இந்த நிலைமையைச் சீர்திருத்துவதற்கு எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. படித்தவர்கள், மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வது என்று முடிவு செய்துகொண்டு, மக்களின் பழக்கங்களைச் சீர்திருத்துவதே அந்த வழி. அதோடு ரெயில்வே அதிகாரிகளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது. அவசியமாகும் போதெல்லாம் புகார்களை அனுப்ப வேண்டும் தங்களுக்கு வசதியைத் தேடிக் கொள்ளுவதற்காக லஞ்சம் கொடுப்பது போன்ற சட்ட விரோதமான காரியங்களை இந்தப் படித்தவர்கள் செய்யாது இருக்க வேண்டும். விதிகளை யார் மீறி நடந்தாலும் அதைச் சகித்துக் கொண்டு இருந்துவிடக்கூடாது. இவற்றை எல்லாம் செய்தால், அதிக அபிவிருத்தி ஏற்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
191819இல் நான் கடுமையான நோய்வாய்ப்பட்டதால், எனது மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தைத் துரதிருஷ்ட வசமாகக் கைவிடும்படி நேர்ந்தது. இது எனக்கு இடைவிடாத மன வேதனையாகவும் வெட்கமாகவும் ஆகிவிட்டது. ஏனெனில், முக்கியமாக மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களைப் போக்கியாக வேண்டும் என்ற கிளர்ச்சி வலுவடைய ஆரம்பித்த சமயத்தில் இவ்வாறு நேர்ந்தது. ஏழைகளான ரெயில்வே, கப்பல் பிரயாணிகளின் கஷ்டங்கள், அக் கஷ்டங்களை அப்பிரயாணிகளின் பழக்கங்கள் அதிகமாக்குவது, வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அரசாங்கம் அனுமதித்து வரும் அக்கிரமமான வசதிகள் இவை போன்றவை முக்கியமான விஷயங்களாகும். விடாமுயற்சியும் திறமையும் உள்ள இரண்டொரு பொது ஜன ஊழியர்கள் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு, வேலை செய்வதற்கு இவை ஏற்ற துறைகளாகும்.
ஆனால் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை இதோடு விட்டுவிட்டுக் காசியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு இனி வருகிறேன். காலையில் அங்கே போய்ச் சேர்ந்தேன். ஒரு பண்டாவின் வீட்டில் தங்குவது என்று தீர்மானித்தேன். ரெயிலிலிருந்து இறங்கியதுமே, அநேக பிராமணர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டனர். அவர்களுள் கொஞ்சம் சுத்தமாகவும் மற்றவர்களைவிடச் சுமாராகவும் தோன்றிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அவர் வீட்டுக்குச் சென்றேன். நான் சரியாகவே தேர்ந்தெடுத்திருந்தேன் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவருடைய வீட்டு முற்றத்தில் ஒரு பசு கட்டியிருந்தது. நான் தங்குவதற்குக் கொடுத்திருந்த இடம் மாடியில். கங்கைக்குப் போய் வைதிக முறைப்படி ஸ்நானம் முதலிய அனுஷ்டானங்களையெல்லாம் முடித்துக் கொள்ளாமல் சாப்பிட நான் விரும்பவில்லை. இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்டா செய்தார். அவருக்கு ஒரு ரூபாய் நான்கணாவுக்கு மேல் எக்காரணத்தை முன்னிட்டும் தட்சிணை கொடுக்கமாட்டேன் என்பதை முன்கூட்டியே அவரிடம் சொல்லிவிட்டேன். ஆகையால், இதை மனத்தில் வைத்துக் கொண்டே ஏற்பாடுகளைச் செய்யும்படியும் சொன்னேன்.
பண்டா மறுவார்த்தை பேசாமல் ஒப்புக் கொண்டார். யாத்திரிகர் ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் எங்கள் சேவை ஒரேமாதிரிதான். ஆனால் எங்களுக்குக் கிடைக்கும் தட்சிணை, யாத்திரிகரின் இஷ்டத்தையும் சக்தியையும் பொறுத்தது என்றார். வழக்கப்படி செய்ய வேண்டியவைகளைப் பண்டா என் விஷயத்தில் சுருக்கிவிட்டதாகவும் நான் காணவில்லை. பன்னிரண்டு மணிக்குப் பூடிஜ முடிந்தது. நான் சுவாமி தரிசனத்திற்காகக் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போனேன். அங்கே நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. 1891இல் நான் பம்பாயில் பாரிஸ்டராக இருந்த சமயம், பிரார்த்தனை சமாஜ மண்டபத்தில் காசிக்கு யாத்திரை என்பது பற்றி நடந்த ஒரு பிரசங்கத்திற்கு நான் தயாராகவே இருந்தேன். ஆனால் உண்மையில் நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததைவிடப் பன் மடங்கு அதிகமாக இருந்தது.
குறுகலான, வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. தியானத்திற்கும் தெய்வசிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத்தக்க அந்த இடத்தில் அது இல்லவே இல்லை. அந்தச் சூழ்நிலையை ஒருவர் தம் உள்ளத்தினுள்ளே தான் தேடிக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைப் பற்றி பிரக்ஞையின்றி, மெய்ம்மறந்தவர்களாகச் சகோதரிகள் தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். இதற்காகக் கோயில் நிர்வாகிகளை யாரும் பாராட்டி விடுவதற்கில்லை. கோயிலைச் சுற்றிலும் சுத்தமான இனிய, சீரிய சூழ்நிலையை உள்ளும் புறமும் உண்டாக்கி, அது நிலைத்திருக்க செய்வது, நிர்வாகிகளின் பொறுப்பு. இதற்குப் பதிலாகக் கபடஸ்தர்களான கடைக்காரர்கள, மிட்டாய்களையும் புது நாகரிக விளையாட்டுப் பொம்மைகளையும் விற்கும் கடைத் தெருவையே நான் அங்கே கண்டேன்.
நான் கோயிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை. ஆனால் அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்கு சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன. ஞான வாவி ( ஞானக் கிணறு )க்குப் பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால், நான் காணவில்லை. ஆகையால் எனக்கு மனநிலை நின்றாயில்லை. ஞான வாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சிணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்து விட்டார். இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும் என்று கூறி என்னைச் சபித்தார். இதைக் கேட்டு நான் பரபரப்படைந்துவிடவில்லை. மகராஜ் என் விதி எப்படியானாலும் சரி. ஆனால், இப்படி யெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தக் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள் என்றேன்.
போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம் என்றார். தொடர்ந்து வசைமாரி பொழிந்தார். தரையில் தம்படியை எடுத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். பிராமணர் ஒரு தம்படியை இழந்தார், எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக்கொண்டேன். ஆனால் மகராஜ், அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப் போ. உன்னைப் போலவே நானும் இருந்துவிட முடியாது. உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால் அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒருமுறை பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டேன். அதற்குப் பிறகு இரு முறை காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அது மகாத்மா பட்டம் என்னைப் பீடித்த பிறகு. ஆகவே நான் மேலே கூறியிருப்பதைப் போன்ற அனுபவங்கள் அப்பொழுது ஏற்படுவது அசாத்தியமாயின. என்னைத் தரிசிப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கும் மக்கள் கோயிலில் சுவாமியை நான் தரிசிப்பதற்கு என்னை அனுமதிக்கமாட்டார்கள. மகாத்மாக்களின் துயரங்கள் மகாத்மாக்களுக்கு மாத்திரமே தெரியும். மற்றபடி அழுக்கும் சப்தமும் முன்பு இருந்தது போலவே இருந்தன.
கடவுளின் எல்லையற்ற கருணையில் யாருக்காவது சந்தேகம் இருக்குமாயின், அவர்கள் இப் புண்ணிய ஷேத்திரங்களுக்குப் போய்ப் பார்ப்பார்களாக. மகா யோகியான கடவுள், தம் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவு வஞ்சகங்களையும் அதர்மங்களையும் சகித்துக் கொண்டிருக்கிறார் * யே யதாமாம் ப்ரயத்யந்மே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம் ( மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான் ) என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால் இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியம் இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.
கோயிலுக்குப் போய் வந்த பின்னர் ஸ்ரீமதி பெஸன்டைப் பார்க்கப் போனேன். அவர் நோயுற்றிருந்து அப்பொழுதுதான் குணமடைந்தார் என்பதை அறிவேன். என் பெயரை எழுதி உள்ளே அனுப்பினேன். அவர் உடனே வந்தார். அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று மாத்திரமே நான் விரும்பினேன். ஆகையால், தங்களுக்கு உடல் நலமில்லை என்பதை அறிவேன். என் வணக்கத்தைத் தங்களுக்குச் செலுத்திக் கொள்ள மாத்திரமே விரும்பினேன். தங்களுக்குச் சரீர சுகம் இல்லாதிருந்தும் என்னைப் பார்க்க அன்புடன் தாங்கள் இசைந்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குமேல் தங்களுக்குத் தொந்தரவு கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறி அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.